அன்புடையீர், வணக்கம்
தமிழ் வாழ்வே தம் வாழ்வாய் வாழ்ந்து,
தமிழ்த் தாய்க்குப் பாமாலை பல சூட்டித்
தம் கவிதைகளைக் கைவாளாய்க் கொண்டு முத்தமிழுக்கு முடிசூட்டப் போராடி,
மூவேந்தர் நிலம் மீட்க, தமிழுலகெங்கும் தாய்மொழி ஆட்சி திகழ, தமிழறம் தழைக்க, சாதி சமயமற்ற அறிவார்ந்த சமத்துவச் சமுதாயம் அமைக்க
வீறுகவி பாடி,
பாடிய படியே தம் இறுதி மூச்சு வரை
கொள்கைக் குன்றமாக, தன்மானத் தங்கமாக, தலைதாழாச் சிங்கமாக, சங்கத்தமிழ்க் கவிஞராக, கவிஞர்க்கும் கவிஞராக, கவியுலக முடியரசராக, வீறுகவியரசராக வாழ்ந்த முடியரசனார் பெயரில் அமைந்த இவ் அவைக்களம்,
ஆண்டு தோறும் மாணவர்களிடையே முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை கவிதை பாட்டு, நாட்டியப் போட்டிகள் நடத்தி வீறுகவியரசர் விழாவில் வீறுகவியரசர் முடியரசன் பரிசுகள் வழங்கித் தமிழ்மொழி, இன, நாட்டுப் பற்றை விதைத்தும் ஊட்டியும் வருகிறது.
வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத்தை 2000 ஆம் ஆண்டு தொடங்கி வைத்த தமிழ் நாட்டின் அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு நடைபெறுவதை முன்னிட்டு 27.08.2023 ஞாயிற்றுக் கிழமை, காலை 09.00 மணிக்கு, காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கலைஞரைப் பற்றி வீறுகவியரசர் முடியரசனார் எழுதிய கவிதைகள் ஒப்பித்தல் மற்றும் பேச்சு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், அவர்தம் மாணாக்கர்களை ஆக்கமும் ஊக்கமும் தந்து, இப்போட்டிக்கு அனுப்பி வைத்து எம் தமிழ்த் தொண்டுக்குத் துணை புரிய விழைகிறோம். நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
பேரா.முனைவர் சே. செந்தமிழ்ப் பாவை
பேரா.முனைவர் இரெ.சந்திரமோகன்
முனைவர் தமிழ் முடியரசன்.
முனைவர் இரா.வனிதா
ஆட்சிக் குழு வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்.
போட்டி நெறி முறைகள்
01) இவ் அவைக்களம் நடத்திய போட்டிகளில் ஏற்கனவே முதல் மூன்று பரிசு பெற்றோர் இவ்வாண்டுப் போட்டிகளில் பங்கேற்க இயலாது.
02)இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்கள் பெயர்ப் பட்டியலை 18.08.2023 ஆம் தேதிக்குள், thamizhmudiyarasan@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குக் கல்வி நிலையத் தலைமை ஆசிரியர் / முதல்வர் / கல்லூரி, பல்கலைக்கழகத் துறைத் தலைவர் கையொப்பம் மற்றும் முத்திரையுடன். உரிய பொறுப்பாசிரியரின் அலைபேசி எண்ணுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
03) போட்டிப் பிரிவுகள் 1 முதல் 15 வரை ஒவ்வொன்றிற்கும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் பிரிவிற்கு இருவர் (கல்லூரி பல்கலைக்கழகமாக இருப்பின் ஒவ்வொரு துறையிலிருந்தும் இருவர் வீதம்) பங்கேற்கலாம். மதிய உணவு கொண்டு வருதல் வேண்டும். பெற்றோர் / ஆசிரியர் பாதுகாப்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
04) பிரிவு 1 முதல் 15 வரை ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வழங்கப் பெறும். முதல் மூன்று பரிசுகள் பெறாத பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், மாணாக்கர் ஒருவருக்கு ஊக்கப் பரிசு வழங்கப் பெறும்.
05) ஒப்பித்தல் போட்டியில் (பிரிவு 1 -6) பொருளுணர்ச்சி தோன்ற, ஒலிப் பிழையின்றி ஒப்பித்தல் வேண்டும். பாடுதலோ நடித்தலோ கூடாது. பொருளறிந்திருத்தல் வேண்டும்.
06) பேச்சுப் போட்டியின் கால வரையறை பள்ளி மாணவர்களுக்கு (பிரிவு – 7, 8, 9, 10) ஐந்து மணித் துளிகளும், கல்லூரி / பல்கலைக்கழக மாணவர்களுக்கு (பிரிவு 11) ஏழு மணித் துளிகளும் ஆகும்.
07) கட்டுரைப் போட்டியின் கால வரையறை ஒரு மணி நேரமும், பக்க அளவு ஐந்து பக்கங்களுமாகும்.
08) கட்டுரை எழுத அவைக்கள முத்திரையிட்ட தாள்கள் வழங்கப் பெறும். ஏனைய எழுது பொருள்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும்.
09) நடுவர்கள் தீர்ப்பின் படி போட்டியில் வெற்றி பெற்றோர் பட்டியல் உரிய கல்வி நிலையங்களுக்கு அனுப்பப் பெறும்.
10) போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அவைக்களச் சான்றிதழும், போட்டியில் வெற்றி பெற்றோருக்கு வீறுகவியரசர் முடியரசன் பரிசுகளும், வீறுகவியரசர் முடியரசனார் விழாவில் பெருஞ்சான்றோர்கள் வழங்குவர். விழா நாள், நேரம், இடம் குறித்து உரிய கல்வி நிலையங்களுக்கு விழாவிற்கு முன்னர் தெரிவிக்கப் பெறும்.
போட்டிகள் பற்றிய முழுமையான தகவல்களையும் தலைப்புகளையும் கீழ்க்காணும் PDF கோப்பினைத் தரவிறக்கிப் பெற்றுக்கொள்க
எழுத்தாளர் பாரி முடியரசன் அவர்கள் எழுதிய நூலின் PDF கோப்பு:
வீறுகவியரசர் கவிதைகள்: