புழுவாவுனை இகழ்வார்முனம்
புலியேறென எழுவாய்
பொதுவாழ்வினில் நிலையோடிரு
புதுவாழ்வினை அடைவாய்
தொழுதேவளர் உடல்வாழ்வது
தொலையாயெனில் உனையே
தொழுநோயொடு திரிவாரினும்
இகழ்வாரிதை நினைவாய்
மொழிவாழவும் இனம்வாழவும்
முயல்வாய்தமிழ் மகனே
முரணாதொரு முகமாயெழு
முடியாததும் உளதோ?
இழிவாகிய நிலைஓடிட
எடுவாள்பகை மலையோ?
எழுவாய்தலை நிமிர்வாய்உனை
எதிர்வாரினி இலையே
– வீறுகவியரசர் முடியரசன் –
வீறுகவியரசர் முடியரசன்
தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலா்ச்சி ஆகிய தளங்களில் ஒரே நேர்கோட்டில் நின்று புதுமைக் கவிதைகள் படைத்த முப்பெரும் கவிஞர்கள் பாரதி – பாரதிதாசன் – முடியரசன் ஆகியோர்.
தாய்மொழியின் மீதும், தமிழினத்தின் மீதும் தீராப் பற்று கொண்டிருந்த முடியரசனார் மொழிக்கும், இனத்திற்கும் இழுக்கு நேரும்போதெல்லாம் பொங்கியெழுந்து மொழி, இனங்காக்கத் தம் பாட்டினைப் படை ஆயுதமாய் ஏந்தினார்.
ஊருக்கு மட்டும் உபதேசிக்கும் போலிப் புலவராய் வார்த்தை வேறு; வாழ்க்கை வேறு என்றிராமல் தான் பாடியபடியே கொள்கை நெறி மாறாமல் சுயமரியாதையோடு வள்ளுவநெறிப்படி வாழ்ந்து காட்டினார். தனது பெயரை (துரைராசு) முடியரசன் என்றும், தன் துணைவி பெயரை (சரசுவதி) கலைச்செல்வி என்றும் தமிழ்ப்படுத்தி தம் பிள்ளைகளுக்கும் தமிழில் பெயர்சூட்டி மொழிப் பற்றூட்டி வளா்த்தார். தான் மட்டுமல்லாமல், தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்