வீறுகவியரசர் புகழ் மகுடம்

 

கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்

                                               > புரட்சித் தந்தை பெரியார்

திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் ஆவார். புரட்சிக் கவிஞர் அடிச்சுவட்டில் இன்று எத்தனையோ கவிஞர்கள் மக்களிடையே எழுச்சி முரசு கொட்டி வருகிறார்கள் இலட்சிய கீதம் இசைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் முதன்மையானவர் முடியரசன்

                                               > அறிஞர் அண்ணா

‘கவிப்பேரரசர்’ என என்னால் அன்புடன் அழைக்கப்பட்டவர் முடியரசனார். தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால் வான்பெய்யும் கோடைமழை போலப் பொழிகின்ற முடியரசர்; முன்னாள் தொட்டு இந்நாள்வரை நம்கவியரசர். தன்மானக்குன்றம் – தலைதாழாச் சிங்கம் – கொள்கை மாறாத்தங்கம் – திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணயற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர். அதிலும் குறிப்பாக முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று செங்கொலோச்சுகிறதென்றால்… அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்

                                        > கலைஞர் மு.கருணாநிதி

கவிஞர் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தலை தாழா வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர். யாருக்காகவும் எதற்காகவும் தன் கொள்கையையும் நிலையையும் மாற்றிக் கொள்ளாத பெருமிதத்திற்குரியவர். ஒரே கொள்கை; ஒரே இயக்கம் அவருக்கு. அவை தன்மானக் கொள்கை; தமிழியக்கம் ஆகும். நான் பாட்டெழுத அழைத்தேன்….. தமிழை விற்கமாட்டேன் என்றுகூறிய உண்மையான வணங்கா முடியரசர்

                                        > மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

 

பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி, அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி. கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். திராவிட இயக்கத்தை வளப்படுத்த இளைய தலைமுறையை எழுச்சி பெறச் செய்ய நமக்குக் கிடைத்த இணையற்ற உறுதி வாய்ந்த தன்மானக் கவிஞர்தான் முடியரசன். தமிழ் மகுடம் சூடிய தனி அரசர் அவர். தமிழுக்கன்றி வேறெதெற்கும் தலைதாழாக் கவிஞராக நிமிர்ந்த தலையுடன் உயர்ந்து விளங்கும் முடி கொண்டு வாழ்ந்தவர் வீறுகவியரசர் முடியரசனார் அவரால் தமிழும் தமிழரும் ஏற்றம் பெற்றனர்                          

                                               > பேராசிரியர் க.அன்பழகன்

எனக்குக் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசையால் அப்பாவிடம் (கவிஞர் கண்ணதாசன்) சென்று, கவிதை எழுவது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், “கவிதை எழுதுவதற்குச் சொல்லிக் கொடுத்தெல்லாம் புரிய வைக்க முடியாது; இந்தா.. இந்தக் கவிதைப் புத்தகத்தைப் படி” என்று கூறி, ‘முடியரசன் கவிதைகள்’ நூலை என் கையில் தந்து, “முடியரசன் கவிதைகளைப் படித்து மனப்பாடம் செய், யாப்பும் கவிதையும் தன்னாலே உனக்கு வந்துவிடும்” என்று அப்பா (கண்ணதாசன்) கூறினார். அவர் சொன்னபடியே முடியரசன் கவிதைகளைப் படித்து மனப்பாடம் செய்தேன். அறுசீர்,எண்சீர் விருத்தமெல்லாம் எனக்குத் தாமாகவே வந்தன. கவிதை எழுதக் கற்றுக் கொண்டேன்” அப்பாவிடம் நான் உதவியாளராக இருந்தக் காலகட்டத்தில் அப்பா பாடல்கள் எழுதி வெளிவந்த திரைப்படங்களின் டைட்டில்களில் ‘பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன், உதவி: கண்மணி சுப்பு’ என்று வரும். நான் முடியரசனார் கவிதைகளைப் படித்து மனப்பாடம் செய்திருந்த பழக்கத்தினால், சீர் பிரித்து எழுதக் கூடிய தெளிவு என்னிடம் இருந்ததால், அப்பா சொன்ன வரிகளை அழகாகச் சீர் பிரித்து எழுதிக் கொடுத்தேன். இசையமைப்பாளர் பாடிப் பார்த்து மிகச்சரியாக இருப்பதாகச் சொன்னார். முடியரசனார் கவிதைகளைப் படித்து, திரைப்படத் துறையில் காலூன்றினேன்.

             > கண்மணி சுப்பு (கவிஞர் கண்ணதாசனின் மூத்த மைந்தர்)

புதுமைக் கவிஞர், பாவரசர், கவிப்பேரரசர், கவியரசு, சங்கப் புலவர் எனும் பட்டங்களையும் பெற்ற பெருமைக்குரியவர் முடியரசனார். கவிதையே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழாக வாழ்ந்தவரவர். இலக்கியத்தில் முதல் இடம் கவிதை; கவிதையில் முதல் இடம் முடியரசனார்

                                                     > வைகோ

கவியரசு முடியரசனாரின் கவிதைகளில் மொழிப்பற்று, தமிழ் மக்களின் முன்னேற்றம் மையக் கருத்துக்களாக அமைந்திருக்கும். அவரது கவிதைகளில் கனல் தெறிக்கும். சமூக சமதர்மத்துக்கு எதிரான கருத்துக்களைச் சாடுவார். பழமையை, மடமையை அவர் ஏற்க மறுத்தவர். புதுமை படைத்தவர். அக்காலத்தில் மாணவர்கள் புடைசூழ அவர் நடந்து வரும்போது, சோழன் ராஜசபையில் கம்பன் ராஜநடை நடந்து வருவது போல் இருக்கும். கவிஞர் பெருமகனார் முடியரசனார்க்கு தக்க நினைவுச் சின்னமாக அவரது தகுதிக்கு மரியாதை தரும் வகையில் உரிய செயல் ஒன்று செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசும், தமிழார்வலர்களும் அத்தகு கடமையினைச் செய்து முடிக்க வேண்டும்

                     தா.பாண்டியன், பொதுவுடைமைக் கட்சித் தலைவர்

 

காரைக்குடியில் முதுபெரும் கவிஞர் முடியரசனார் வாழ்ந்த இல்லம் அரசு சார்பில் நினைவிடமாக மாற்றி, நினைவு மண்டபமாகக் கட்டப்பட வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வேன்

       > கா.காளிமுத்து, தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் (10.02.2002)

கவியரசர் முடியரசனார் தம் இலக்கியப் பணியில் திராவிட இயக்க்க் கொள்கைகளைப் பரப்பியவர். எத்தனையோ இடர்ப்பாடுகளும் இக்கட்டுகளும் வந்த போதும் தான் கொண்ட கொள்கையில் தடம் புரளாமல் உறுதியாக நின்றவர். பணம் பதவிகள் நாடி வந்தபோது தன்னை நிறம் மாற்றிக் கொள்ளாமல் தமிழ்ப் பணி செய்தவர். திராவிட இயக்க முத்துக்களுள் முக்கியமானவர் முடியரசனார்

                    > ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

பாரதி-பாரதிதாசன் கவிதா மண்டலத்தின் முதற்பெருங் கவிஞராகத் திகழ்ந்த பெருமைக்குரியவர் கவிஞர் முடியரசனார். தமிழ் பாடிய வானம்பாடியாகக் கவிதை வானில் சிறகடித்துப் பறந்தவர்

                > பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

பாவரசர் முடியரசனார் தமிழின் பாதுகாப்புக்காக உழைத்தார்; தமிழினத்தின் நலன்களுக்காகப் பாடுபட்டார். எனினும் அதை விட சாதியத்தின் மீது துணிச்சலாகக் கைவைத்ததுதான் அவரது நெஞ்சுரத்தைக் காட்டுகிறது. அவர் தன்னை ஒரு கவிஞராக மட்டும் அடையாளப் படுத்திக் கொண்டு பேரும் புகழும் பெற்று வாழ்ந்திருக்க முடியும். ஆனால் கொள்கை வழியில் தன் இல்லற வாழ்வையும், தன் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரையும் அத்தகைய புரட்சிப் பாதையில் வழி நடத்தியிருக்கிறார். தமிழினத்தைக் காப்பாற்றிட முடியரசனாரின் கொள்கை வழியை யாவரும் பின்பற்ற வேண்டியது வரலாற்றுத் தேவை

       > தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 

தமிழை உயிர் மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்டு மரபுக் கவிதை உலகில் மணிமுடி சூடிய மாமன்னராய் விளங்கியவர் கவியரசர் முடியரசர். பாட்டரசர் எங்கள் அய்யா! வீழ்ந்து விடாத வீரத்தோடும், மண்டியிடாத மானத்தோடும் நிற்கும் அவர் கவிதைகள். அவர் படைப்புகள் நாட்டின் நலன் நாடி உழைக்கின்ற எம் இளைஞர்களின் கைகளில் எறிகணைகளாகும். எம் இனத்தை ஒன்று படுத்த உதவும் கட்டுக் கொடியாகும். பகைவர்க்கு வெடியாகும்                                                      > சீமான், தலைவர், நாம் தமிழர் கட்சி

இயல்பிலேயே தமிழன்பனான நான் கல்லூரியில் பயிலும் காலத்தில், கவியரசர் முடியரசனார் கவிதைகளைப் படித்ததன் விளைவாகத் தீவிரத் தமிழுணர்ச்சியாளனாக ஆனேன். அவரால் ஊட்டப்பட்ட தமிழ்ப் பற்று என்னை விட்டு எந்நாளும் அகலாது. ‘எக்கட்சியிலிருந்தாலும் தமிழனாக, தாய்மொழிப் பற்றுள்ளவனாக இரு’ என்பதே அவரது கவிமொழி

       ஏ.மா.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் நடுவண் அமைச்சர், (காங்கிரசுக் கட்சி)

கவிஞர் முடியரசன் ஓர் அற்புதக்கவிஞர். பொருளீட்டுவதற்காக, ஆபாசங்களையும் அருவருப்புகளையும் பாடும் கவிதாசர்களிடையே முடியரசன் ஒருவர்தான் வேறுபட்டுத் தனித்து நின்று மனித முன்னேற்றத்துக்காகவும், தமிழ் விடுதலைக்காகவும் தமிழரின் அடிமை விலங்கை உடைக்கவும் பாடிய புரட்சிக் கவிஞராக நான் காண்கிறேன். சாகித்ய அகாடமிகளையும், ஞான பீடங்களையும் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தன் கொள்கை இலக்கை நோக்கியே அவர் குறியாயிருந்தார்                                                           

                                        > எழுத்தாளர் ஜெயகாந்தன்

இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்

                           > முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

 

கவிஞர் முடியரசனார் தமிழ்வாழ்வே தம் வாழ்வாகக் கொண்டவர். தம்கவிதைகள் மூலம் சாதி, சமயம், கடந்த சமுதாயம் அமைய தம் கவிதைகள் மூலம் போராடியவர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துகளை எதிர்த்து தம் கவிவாள் கொண்டு அறிவுப்போர் அயராது நடத்தியவர். கவிஞர் என்பதற்கு அவர் ஓர் இலக்கணம். தமிழர் பண்பாடு உயர அறிவுப்போர் நடத்தியவர். என்றும் பெருங்கவிஞர் பெயர் நிலைத்து நிற்கும்

             > அரு.இலக்குமணன், உச்ச நீதி மன்ற முன்னாள் நீதியரசர்

கவியரசு முடியரசனார் என்னுடைய ஆசிரியர். வள்ளுவனை, அவ்வையை, கம்பனை, இளங்கோவை, பாரதியை, பாரதிதாசனை ஆகிய நல்ல பிள்ளைகளைப் பெற்ற தமிழ்த்தாய், முடியரசனாரையும் ஈன்றாள். அவர் கவிதைகள் தென்றல் காற்றின் சுகத்தையும், காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தையும், அனல் கக்கும் எரிமலையின் வெம்மையையும் உணர வைப்பன. தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதை இடைவிடாது சொல்லித் தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டியவர். வாழ்க்கையில் செம்மையிலிருந்து ஒரு போதும் மாறியதில்லை

             > மெ.சொக்கலிங்கம், உயர்நீதி மன்ற முன்னாள் நீதியரசர்

 

கவிஞர் முடியரசனார் அளவிற்குத் தமிழ் பாடிய இன்னொரு கவிஞரைக் காண்பது அரிது. பாரதிதாசன் உட்பட, பாவலர்கள் அனைவரையும் மிஞ்சித் தமிழ் மொழி பற்றிப் பாடியுள்ள பெருமை வீறுகவியரசர் முடியரசனுக்குண்டு

        > டாக்டர்.வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்

பாரதியார் இவருக்குப் பாட்டனார்; பாரதிதாசன் இக்கவிஞருக்குத் தந்தை போன்றவர். அக்கவிஞர்களுடைய வழியில் சென்று ஒவ்வொரு விதத்தில் அவர்களையெல்லாம் வென்று விட்டார் முடியரசனார்

                                        > டாக்டர் அ.சிதம்பரநாதனார்

 

ஆற்றொழுக்கனைய கவிதையோட்டமும், ஆழ்ந்த கருத்துச் செறிவும், இலக்கணவளமும், இலக்கியச் செழுமையும், உவமை நயமும் நிறைந்த கவிதைகளைப் படைத்தவர் கவியரசர் முடியரசன். தமிழிலக்கிய வரலாற்றில் அவருக்கென்று சிறப்பான இடமுண்டு

              > டாக்டர் மு.வரதராசனார், முன்னாள்துணைவேந்தர்,மதுரை பல்கலைக்கழகம்

 

உலகமொழிகளில் தேசியக் காப்பியம் என்று சொல்லத்தக்கவை மூன்று. அம்மூன்றனுள் ஒன்றான பூங்கொடி எனும் பைந்தமிழ்க் காப்பியம் படைத்தவர் கவிஞர் முடியரசன்.

                                 > பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை

 

சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள், அவற்றைத்தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை

                                 > தவத்திரு குன்றக்குடி அடிகளார்

“கவியரசர் முடியரசனார் தமிழால் உயர்வு பெற்றாரா? அல்லது தமிழ் அவரால் உயர்வு பெற்றதா? என்றால், தமிழ்தான் அவரால் உயர்வு பெற்றது. முடியரசனார் கவிதைகள் காலம் கடந்தும் நிலைத்துத் தமிழ் காக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் யாருக்கும் கட்டுப்பட்டவராக இல்லை. அன்னைத் தமிழை யாருக்கும் அடிமையாக்கியது கிடையாது. தமிழை விற்றதில்லை. யார் கவிஞன்? என்றால், அவர்தான் கவிஞன். தமிழனத்திற்கு வீர உணர்ச்சியை ஏற்படுத்தியவர் அவர். சென்ற நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்களில் முதல் நிலைக் கவிஞராகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிதைப் போராளி

                                 > குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

 

முடியரசனார் நாடறிந்த பாவலர். பழைய நாள்களில் எங்கே பாட்டரங்கம் நடைபெற்றாலும், அங்கே இந்தக் குயில் கூவாமல் இருந்ததில்லை. திராவிட இயக்கத்தின் போர் முரசமாக முடியரசன் திகழ்ந்தார். அவர் அறியாத தலைவர்களும், அவரை அறியாத தலைவர்களும் அற்றை நாளில் இல்லை. அவர் பரவலாகக் காணப்படும் ஆசிரியர்களிலும் கூடுதலானவர். காரைக்குடி கம்பன் விழா தொடங்கும் போது “நமஸ்காரம்” என்று சொல்லித்தான் தொடங்குவார் சா.கணேசன்,. அதனை மாற்றி “வணக்கம்” என்று கூற வைத்த புரட்சியை இயக்கியவர் வீறுகவியரசர் முடியரசனார். தமிழ் என்று வந்து விட்டால், அதற்கு எதிரான எதனோடும் இணக்கப் படுத்திக் கொள்வது அவரது இயல்பில்லை. முடியரசன் என்னுடைய ஆசிரியர்

                    > பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

 

தமிழ் மானம், தமிழ் உணர்வு பற்றி எழுச்சிப் பாடல்களை எழுத வந்த இன்னுமொரு புரட்சிக்கவிஞர்தான் கவியரசர் முடியரசர். விருத்த வரிகளால் இளைஞர்கள் பலரை எழுத வைத்தவர் முடியரசர். அந்நாளில் கல்லூரிகளிலும், கூட்டங்களிலும் கவியரங்கம் நடந்தால் கவியரசர் முடியரசர்தான் தலைமை தாங்குவார். தமிழின் சுவை, தமிழின் அழகு முடியரசன் பாடல்களில் வழிந்தன.  தனக்கொரு தமிழ் மாட்சியை கவிதைகளில் பொன்னொளியாக மின்னிடப் பாடல் புனைந்ததை நாடு மறப்பதற்கில்லை”                                        

       > ஔவை நடராசன்,முன்னாள் துணைவேந்தர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

 

இந்திய விடுதலையை முதன்மையாகக் கொண்டு பாரதி பாடினான்; அவன் வழி நின்றோர் பலர்; அவருள் தலைமை பாரதிதாசனுக்கு. பாரதிக்குப் பின் திசைமாறிய பாரதிதாசன் தமிழை முதன்மை ஆக்கினார்; அவர் வழி நின்றோருள் தலைமை ‘முடியரசருக்கே’. அவருக்குக் கண்ணதாசன் கொடுத்த வண்ண வார்த்தைகள் மிகப்பெரிய விருது; மரியாதை! அவ்வார்த்தைகள் – “முடியரசர் பாவரசர் பாடுகின்றார்; நாம் / முழங்காலைநிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்

                                 > தமிழறிஞர் சாலமன் பாப்பையா

 

அன்றும் இன்றும் என்றும் தமிழ்த்தாயின் மணிமுடியில் ஒரு மாணிக்கம் கவியரசர் முடியரசனார். பிழைக்கப் பாடியவர் அல்லர் அவர்; தமிழ்மொழி தழைக்கப் பாடியவர். எத்தனையோ இடர்ப்பாடுகள், இன்னல்கள், வறுமை நிலை தாக்கிய போதும் அவர் யாரையும் எதற்காகவும் வேண்டிப் பாட வில்லை. ஆயிரம் துயரங்கள் தொடர்ந்த பொழுதும் தமிழ்மொழியைப் பாடுவதையே குறிக்கோளாக வாழ்ந்தவர். தன்மானம் காத்த கவியாய் வாழ்ந்தவர். பட்டுக்கோட்டை கலியாணசுந்தரத்தின் முன்னோடி முடியரசனார்

                                        > திண்டுக்கல் ஐ.லியோனி

கவியரசு முடியரசன் ஐயா, என் அப்பா இராம.சுப்பையாவின் மிக நெருங்கிய நண்பர். எங்கள் குடும்பமும் கவிஞர் குடும்பமும் குருதி உறவைத் தாண்டிய கொள்கை உறவுகள். கவிஞரின் மகள் குமுதம், மகன் பாரி ஆகியோரின் திருமண வரவேற்பு எங்கள் வீட்டிலேதான் நடந்தது. பாரதிதாசனை நான் நேரில் பார்த்ததில்லை. நாங்கள் பார்த்த பாரதிதாசன் கவிஞர் முடியரசன்தான். அன்று அவர் எழுதிய கவிதைகள் என் போன்ற இளைஞர்களுக்கு உரமூட்டின. அவர் தலைமை ஏற்றுப் பாடிய பல கவியரங்குகளை நான் நேரில் பார்த்துள்ளேன். திராவிட இயக்க உணர்வுகளை எம்போன்றோர் இதயங்களில் ஏற்றிய பாடல்கள். அப்பாடல்களால் இளைஞர்கள் வீறு கொள்வர். கவிஞரின் மகன் பாரியும் நானும் ஒத்த வயதினர். இன்றும் தோழர்களாகவே உள்ளோம். ஒரே இயக்கத்தில் இணைந்தும் பணியாற்றுகிறோம். தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் நட்பில் எங்களுக்கு எப்போதும் பெருமை. கவியரசு முடியரசன் போன்ற முன்னத்தி ஏர்கள் எப்போதும் எங்களுக்கு வழி காட்டுவார்கள். இன்னொரு பாரதிதாசன் அவர்

                                        > பேரா.சுப.வீரபாண்டியன்

 

வீறுகவியரசர் முடியரசனார், கவிதைத்தமிழ் கனியாக இருக்கும். அவரிடம் படித்த மாணவர்கள் பலரில் நானும் ஒருவன் கொள்கைப் பிடிப்புள்ள தமிழ்க்குடி மக்களாக உருவானார்கள். அன்று முடியரசர்களால் நாட்டிலே வளர்ந்தது; இன்று முடியரசன் நாவிலே தமிழ் வளர்கிறது. முடியரசனார் கவிதைகள் உலகெங்கும் வாழும், என்றும் சங்க இலக்கியமாய்த் திகழும்.

                           > எஸ்பி. முத்துராமன், திரைப்பட இயக்குநர்

காரைக்குடி தந்த பாட்டரசன்! ஈட்டிமுனை எழுத்தால் தனியரசன்! எங்களை எல்லாம் எழுத்தால், எண்ணத்தால், வழி நடத்திய எங்கள் ஆசான் முடியரசன் அய்யா  அவர்களிடம் கல்வி பெற்றது நான் பெற்ற பெரும் பேறு! எனக்கு தமிழ் உலகிற்கு அவர்தான் நேரடி ஆசான்! தமிழ்த்திரையுலகிற்கு அவர் மறைமுக ஆசான்! 1960 வாக்கில், எம்.ஆர்.ராதா, அசோகன் நடித்த ‘கண்ணாடி மாளிகை’ என்ற திரைப்படத்திற்கு முடியரசனார் கதை, வசனம், பாடல்கள் எழுதினார். அப்படம் வெளிவந்த நாளை நாங்கள் திருவிழா போல் கொண்டாடினோம். நானும் திரையுலகில் எதிர்காலத்தில் நுழைய வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் திரையுலகில் 126 படங்களை இயக்கி இருந்தாலும், கலைஞர் போன்ற மூதறிஞர்களிடம் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றேன் என்றாலும், இதற்கெல்லாம் முழு முதல் காரணம் என் ஆசான் முடியரசன் அவர்கள்தான்! அவர் – திராவிட இயக்கத்தின் தூண். தமிழர்களுக்கு எழுச்சி தந்த தேன். துப்பாக்கி வயிற்றில் பிறந்த பீரங்கி. அவருடைய துணிவு, கனிவு எந்நாளும் மறக்க முடியாது. அவர் புகழை என்ற்றென்றும் பாடுவதே நம் போன்ற தமிழர்களுக்குப் பெருமை

           >  இராம.நாராயணன் திரைப்பட இயக்குநர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

நான் காரைக்குடி மீ.சு.உயர் பள்ளியில் படித்த பொழுது, என் தமிழாசான் கவியரசர் முடியரசனார். அவர் கற்பகத் தருவாக இருந்தார். எண்ணற்ற மாணவர்களைக் கவிஞர்களாக, தமிழுணர்வாளர்களாக அவர் உருவாக்கினார்; உயர்த்தினார். அவர் உண்டாக்கிய கற்பனைச் செல்வத்தோடு தான் திரை உலகில், ‘காரைக்குடி நாராயணன்’ என்ற பெயர் எழுத்தாளனாய், இயக்குநராய், தயாரிப்பாளனாய் ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முகவரியானது. நான் ஒரு கவிதை நூலை எழுதி, “பாக்குவித்த முடியரசன், ஊக்குவித்த காரணத்தால், ஆக்குவித்த கவிதைகளை, அவர்க்கென்று படைக்கின்றேன்” என எழுதி, அந்நூலை முடியரசனார்க்குப் படைத்து, கவிஞர் கண்ணதாசனிடம் பாராட்டைப் பெற்றேன். காரைக்குடியில் கவிஞர் முடியரசனார் சாலையில் கவிஞர் கண்ணதாசன் மண்டபம் இருப்பதை நான் பலரிடம் கூறிப் பெருமைப்படுவதுண்டு

                           > காரைக்குடி நாராயணன், திரைப்படஇயக்குநர்

கவிஞர் கண்ணதாசன் தன்னை விட, கவியரசர் முடியரசனாரை அதிகம் மதித்தவர் என்பது நானறிந்த உண்மை

             >கவிஞர் ஆடற்கோ, சென்னை (கவிஞர் கண்ணதாசனின் நண்பர்)

வீறுகவியரசர் முடியரசன் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியின்றி வாழ்ந்த எழுச்சிக்காரர். காட்சிக்குப் புலியாக மட்டுமல்ல.. அசலான வாழ்விலும் புலியாக வாழ்ந்து தமிழின் உறுமலாய் உலா வந்தவர். முடியரசனாரின் தடத்தைப் பின் தொடர்ந்து தமிழால் தரணி ஆள்வோம்..என உறுதி ஏற்போம்

             > தமிழச்சி தங்கப்பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர்

 

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செருக்கு எனச் சங்கப் புலவர் போல் வாழ்ந்த முடியரசனாரைத் தமிழகமும் உரிய அளவு போற்றவில்லை. திராவிட இயக்கமும் தகுதியறிந்து கண்டு கொண்டும் சிறப்பிக்கவில்லை. கவியரசர் முடியரசன் தனக்கெனத் தனி பாணி வகுத்துக் கொண்டு கவிதையே மூச்சாக வாழ்ந்தார். தமிழ் அவரது உயிர். எமக்குத் தெரிந்தவரை தமிழை இத்துணை நேசித்த ஒருவரை யாம் இதுவரை கண்டதில்லை. தமிழ் உள்ளவரை வாழ்வு பெறும் கவிதைகளை அவர் தந்து சென்றுள்ளார்.

                                        > தமிழறிஞர் தமிழண்ணல்

கவியரசர் முடியரசனார் தமிழுணர்ச்சிப் பிழம்பாக வாழ்ந்தவர். அவருடைய எழுத்துகள் யாவும் தமிழுணர்ச்சியையும் தமிழ்ப் பண்பாட்டையும் சுயமரியாதை உணர்ச்சியையும் மையப்படுத்தியவை. அவர் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனையாளர். விளம்பரம் வேண்டாத சீர்திருத்தவாதி. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த செயல் வீரர். தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு ஒளிவிளக்கு.

       > முனைவர் பொற்கோ, முன்னைத் துணைவேந்தர், சென்னை பல்கலைக் கழகம்

தன்மானக் கவியரசாய், தமிழிசைப் பாவலராய், மரபின் மைந்தராய், தமிழ் மரபுக் காவலராய், வள்ளுவர் நெறியில் வாழ்க்கையை நடாத்தி, வாய்மைச் சொல் போற்றி, சொல்லும் செயலும் சேர்ந்தோங்க செயல்பட்டு, வறுமையிலும் செம்மை போற்றி, வாழ்வாங்கு வாழ்ந்தவர். தன்னிகரில்லா தனிப்பெரும் கவிஞர் முடியரசர்

   > முனைவர் மு.பொன்னவைக்கோ, முன்னைத் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம்

தன்னுடைய நெஞ்சில் ஊறிய கருத்தைத் துணிந்து முன் வைத்துப் பாடுவதிலும், ….. தன்னிகரற்ற முடி சூடாக் கவி மன்னர் முடியரசர். செம்மாந்த கவிஞன் ஆவர். பொன்னுக்கும் பொருளுக்கும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம் படைத்த புரட்சிக் கவிஞன். சீர்திருத்தச் செம்மல். தேசிய பாரதிக்கு ஒப்பானவர். முடியரசன் கவிதைகள் காலத்தால் அழிக்க முடியாத சிறந்த இலக்கியப் பேழை; செம்மொழிச் செல்வம். அவரது கவிதைகளும் காப்பியங்களும் சங்க காலத்தை நினைவூட்டும்

              > செல்வி சிவராமன் (கவிஞர் கண்ணதாசனின் பள்ளித்தோழர்)

தமிழுக்காக வாழ்ந்தோர் சிலரே. அந்தச் சிலரில் முதல் விரல் – முடியரசனாரைத்தான் சுட்டும். பிறவிக்கவிஞரான அவர் புலமைப் பெருமிதத்தால்  முடிசூடா அரசனாகவே வாழ்ந்தார். யாரிடமும் ‘ஈ’ என்று சென்று நின்று கேளாத தன்மானக் கவிஞரவர். விருதுகள் அவரைத் தேடி வந்தனவே தவிர, யாரிடமும் விண்ணப்பம் போட்டு வாங்க வில்லை. தன்மானக் கவியரசர் முடியரசனார்க்கு தமிழ் மணி மண்டபமும், சென்னையில் சிலையும் வைக்கும் அரசே உண்மையில் தமிழ்நாடு அரசு

                                        > சரசுவதி இராமநாதன்

 

பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் பகுத்தறிவும் தன்மானமும் கொண்ட கவிஞராகத் திகழ்ந்தவர்களுள் முதல்வர் முடியரசனாரே. இத்தகைய ஒரு மாபெரும் கவிஞர் குடத்திலிட்ட விளக்காக முடங்கிக் கிடக்கிறார். இத்துணை திறனும் அறிவும் இல்லாதவர்கள் – ‘கவிஞர்’ என்ற பெயரிலே தலைநகரிலே கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால் குன்றின் உச்சியில் இருக்கத் தகுதியான கவிஞர் முடியரசன் இங்கே அடிவாரத்தில் அழுந்திக் கிடக்கிறார். பாரதியாருக்குப் புகழும் மணிமண்டமும் பின்னால்தான் வந்தன. அவ்வாறே முடியரசனாருக்கும் இனிமேல் மணிமண்டபம் வரும் என்று எதிர் பார்க்கலாம்.

                                         > எழுத்தாளர் அய்க்கண்

முடியரசன் ஓர் தமிழியக்கம். தமிழ் வீறுமிக்க கவிதைகளைப் படைத்தவர். அவரின் கவிதைகள் தமிழ்ப் போரின் ஆவணங்கள். “காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான் ஓர்/ வாணிகப் பரிசிலன் அல்லேன்…./…. முற்றிய திருவின் மூவரே ஆயினும் / பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே” என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாக வாழ்ந்து காட்டிய பெருமித வாழ்வு முடியரசன் வாழ்வு. திராவிட இயக்க எழுச்சிக் காலத்தில் இவர் பாடல்கள் மாற்றுக் கட்சியினர்க்கு இடி முழக்கமாய் அமைந்தன. கவியரசு முடியரசனார் வாழ்கிற காலத்தில் வாழ்வது நாம் பெற்ற பேறு.

                                 >  பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன்

கவிஞர் முடியரசன் படைப்புகளின் காரணமாக திராவிட இயக்கமும், கலையும், இலக்கியமும் வளர்ந்ததோடன்றி மாற்றார் வியக்கும் படியும் பின்பற்றும் படியான ஒரு நிலையை உருவாக்கிற்று. முடியரசனாரை, அறிஞர் அண்ணா ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று குறிப்பிட்டுள்ளார்

       > க.திருநாவுக்கரசர், திராவிட இயக்கத் தூண்கள்’ என்ற நூலில்)

அவர் கவனமெல்லாம் எப்பொழுதும் தமிழ் மீதும் தமிழ் பேசும் சமூகத்தின் மீதுமே இருந்து வந்தது. அதனால் அவர் தன் சொந்த வாழ்க்கையில் அக்கறை செலுத்த முடியாமல் போய்விட்டது. தன்னைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாமல் தமிழ் பற்றியே நினைத்து வாழ்ந்த அவரைத் தமிழகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இது தமிழறிந்தவர்களின் குறையேயாகும். அவர் ஒரு கவிஞர் மட்டுமல்லர். பல கவிஞர்களை உருவாக்கியவரும் ஆவார்           

                              > மு.விசுவநாதன், தினமணி (05.12.1998)

Unfortunately many of the poets preferred to repeat rather than move forward giving wings to their own individuality. Of the few who did manage to make a mark on their own….. Mention may be made of poets like Mudiyarasan….. A high seriousness and world-play mark his traditional style…. As with the others….. of poets, Mudiyarasan has written plentiful lyrics also extolling the Tamizh language in a variety of ways. There is almost a religious frenzy about this love of Mudiyarasan for the language, which is set up as an icon

                                                            > Dr.Prema Nandha Kumar, Book:–The Poet as witness: Tamil poetry through seven hundred years, The life-World of the Tamils: Past and Present-Volume II

                                 * * * * * * *