வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் யாப்பு ஆளுமை

  • முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை, (பேராசிரியர் / இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3

முன் குறிப்பு :-

    இந்திய ஒன்றிய அரசின் தன்னாட்சி நிறுவனமாகிய சாகித்திய அகாதெமி, சென்னை பல்கலைக்கழகம், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் ஆகின இணைந்து 18.2.2022 வெள்ளிக்கிழமை சென்னை மெரீனா வளாகம் சென்னை பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கில் நடத்திய வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு உரையரங்கத்தில் அறிஞர் பெருமக்களால் படிக்கப்பட்ட கட்டுரைகள்:

பொதுத் தலைப்பு

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில்

பன்முக ஆளுமை

கட்டுரைத் தலைப்பும் கட்டுரையாளர்களும்:-

1. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் தமிழ் ஆளுமை ->

            முனைவர் கா.மு.சேகர்,

                               முன்னை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,      உலகத்தமிழாராய்ச்சி           நிறுவனம் மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ்நாட்டரசு, சென்னை

2. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் கவிதை ஆளுமை ->

            முனைவர் முகிலை இராசபாண்டியன்,

            முன்னைப் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,         இந்திய ஒன்றிய அரசு,

            முன்னைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை

3. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் சிறுகதை ஆளுமை ->

            எழுத்தாளர் மு.முருகேஷ்,

            முதுநிலை உதவி ஆசிரியர், இந்து தமிழ் திசை நாளிதழ், சென்னை.

4. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் யாப்பு ஆளுமை ->

            முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை,

            பேரா. & இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம் & நுண்கலைத் துறை,

            அழகப்பா பல்கலைக்கழகம்,

            தலைவர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி

.

5. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் வரலாற்று ஆளுமை ->

            முனைவர் தமிழ் முடியரசன் (எ) ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்,

            பட்டதாரித் தமிழாசிரியர், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி,                   தேவகோட்டை,

            செயலாளர், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்

            செயலாளர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி

6. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் கொள்கை ஆளுமை ->

            மருத்துவர் அனுரத்னா,

            தலைமை மருத்துவர், பொன்னேரி அரசு மருத்துவமனை, சென்னை

7. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் கட்டுரை ஆளுமை ->

            முனைவர் தாமரை,

            நிறுவனர் & தலைவர், திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம், திருச்சி

8. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் காதல் ஆளுமை ->

            முனைவர் வா.மு.சே.ஆண்டவர்,

            இணைப்பேராசிரியர், பச்சையப்பன் கலைக்கல்லூரி, சென்னை

9. வீறுகவியரசர் முடியரசனார் காப்பிய ஆளுமை ->

           பத்மஶ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ்,

            நாட்டியக் கலைஞர், 

            தமிழ்நாட்டரசின் மாநிலத் திட்டக்குழு உறுப்பினர், சென்னை

தமிழ் வாழ்வே தம் வாழ்வாய்க் கொண்டு எழிலும் எழுச்சியும் இனிமையும் வளமையும் நிறைந்த படைப்புகளைப் படைத்துத் தமிழன்னைக்குப் புதிய பல அணிகலன்களைச் சூட்டி மகிழ்ந்தவர் வீறுகவியரசர் முடியரசனார். தமிழக அரசிடம் இருமுறை சிறந்த நூல்களுக்கான பரிசு, பாவேந்தர் விருது, கலைமாமணி விருது, நல்லாசிரியர் விருது ஆகியவனவற்றையும், பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து இராணா இலக்கிய விருது, தமிழ்ச்சான்றோர் விருது, கலைஞர் விருது, அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில், இந்திராணி இலக்கியப் பரிசு போன்ற பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். இவரது கவிதைகள் பல சாகித்திய அகாதெமி, தேசிய புத்தகக்குழு, தென்னிந்திய மொழிகள் புத்தகக்குழு போன்ற அமைப்புகளால் இந்திய மொழிகளிலும், ஆங்கில, உருசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. 2000 – ஆம் ஆண்டு தமிழ் நாட்டரசால் கவிஞரது படைப்புகள் முழுமையும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி,’இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்னும் வரிசையில் ‘முடியரசன்’ என்னும் நூலையும் ‘முடியரசன் கவிதை முத்துக்கள்’ என்னும் நூலையும் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. இன்றும் முடியரசனாரின் கவி மகுடத்தில் ஒரு முத்திரை பதிக்கும் விதமாக வீறுகவி முடியரசனாரின் பன்முக ஆளுமை என்னும் தலைப்பில் சாகித்திய அகாதெமி இக்கருத்தரங்கை நடத்துவது பாராட்டுக்குரியது.


முடியரசனாரின் யாப்பியல் நெறி
முடியரசனார் இலக்கணம் பிறழாமல் கவிதைகள் யாத்தவர். இலக்கணத்தைப் புறக்கணித்துவிட்டுக் கவிதை பாடுவதில் அவருக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. (முடி.க.ப.75) மரபான வடிவம், புதிதான கருத்து, தரமான நெறி இம்மூன்றும் பொருந்தியதே கவிதை என்பது முடியரசனாரின் யாப்பியல் நெறியாகும்.
இதனை, ‘எப்படி வளரும் தமிழ்?’ என்னும் கட்டுரையில்,’சொல், சீர் முதலியன நிரல்பட நின்று, இனிய ஓசை பொருந்தி செறிந்த பொருளுடையதாய், அணியமைப்பும் கொண்டு பயில்வார் தம் உள்ளுணர்ச்சிகளைத் தட்டியெழுப்ப வல்லதாய் அவர்தம் உள்ளங்களை எல்லாம் தன்பாற் கவியச் செய்யும் ஆற்றலுடையதே கவிதை'(எ.வ.த.ப.42) என்னும் அவர்தம் கூற்றும் நன்கு விளக்கும்.
‘கருத்தில் புதுமை வேண்டுமே தவிர புதுக்கவிதை என்ற பெயரில் இலக்கணம் பிறழ்ந்து, பிறமொழிச் சொற்களைக் கலந்து, யாப்பு நெறி துறந்து பாடும் புதுக்கவிதையைக் கவிஞர் அறவே வெறுக்கிறார். மேலும் கவிதையை மரபுக்கவிதை, புதுக்கவிதையென்று பாகுபடுத்துவதைக் கடிந்துரைக்கிறார். மரபு அமைந்தால் தானே அது கவிதையாகும்'(முடி.கடி.ப.78) என்று விளக்கம் தருகிறார். எனவே கவிதை என்றாலே அது இலக்கணமுறைப்படி யாப்பியல் நெறியில் அமைந்திருக்க வேண்டும் என்பதே முடியரசனாரின் கவிதையியல் கொள்கையாகும்.

முடியரசனார் கவிதைகளில் யாப்பு வடிவம்:
முடியரசனார் தம் கவிதைகளை நேரிசைவெண்பா, பஃறொடைவெண்பா, கலிவெண்பா,வெண்கலிப்பா,நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, தாழிசை, அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பன்னிருசீீீீர் விருத்தம், பதினான்குசீர் விருத்தம், இசைப்பா என்பன போன்ற பல்வேறு யாப்புகளில் இயற்றியுள்ளார். இதில் முதலாவதாக அமைவது வெண்பாவாகும்.

நேரிசை வெண்பா:
முடியரசனார் 36 நேரிசை வெண்பாக்களைப் பாடியுள்ளார். நேரிசைவெண்பா “நான்கடிகள் பெற்று,ஈற்றடிசிந்தடியாகவும்,ஏனையஅடிகள் அளவடிகளாகவும்  அமைதல் வேண்டும்.  இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வரும். முதலிரு அடிகளுக்கு ஒருவகை எதுகையும், பின்னிரு அடிகளுக்கு வேறொருவகை எதுகையும் வரும். நான்கடிகளுக்கும் ஒரே வகையான எதுகையும் வரலாம். இயற்சீரவெண்டளையும் (மா முன் நிரை, விளம் முன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய் முன் நேர்) பெற்று வரும். ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஏதேனும் ஒரு வாய்பாட்டுச் சீரைக் கொண்டு செப்பலோசையில் பாடப்பெறும்1.
முடியரசனார் மாணவப் பருவத்தில் தேர்வுக்காக எழுதியமுதல் பாடலே நேரிசை வெண்பாவாக அமைந்தமை (நெ.பூ.ப.279) குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகிறார் என்னும் தலைப்பிலமைந்த,


“ஆண்டறுப தானாலும் அன்றேபோல் இன்றளவும்
காண்டகுநல் தோற்றத்தன் காசினியில் – மீண்டும்பல்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக அன்பன் முருகப்பன்
ஈண்டும் புகழோ டிருந்து

    கம்பன் புகன்றதெனக் கட்டுரைத்த பாக்கடலுள்
    நம்பிக் குளித்து நலங்கண்டான் - அம்புவிக்கு 
    முத்தெடுத்துக் கோத்து முழுநூலில் தந்திட்டான்
    நத்துதமிழ்ப் பாவை நயந்து

முத்தெடுக்க மூழ்கி முருகப்பா பட்டதுயர்
தித்திக்கும் செந்தமிழே நேர்ந்துணரும் – வைத்திருந்த
தஞ்சைமன்னன் ஏடுரைக்கும் தக்கபுல வோர்குழுவின்
நெஞ்சுரைக்கும் இவ்வுலகில் நின்று” (முடி.க.ப.147)

என்னும் பாடல் நேரிசை வெண்பாவிற்குச் சிறந்த சான்றாகும். பூங்கொடி காப்பியத்தில் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல்களாகிய,
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலையென்றால் இன்பமெனக் கேது.

பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்
ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும்
மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.

    தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே
    என்பால் அரும்பி எழுமுணர்வை - அன்பால்
    தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்
    அடிக்கே எனையாண் டருள்.          (க.மு.க.ப.410)

என்னும் மூன்று பாடல்களும் நேரிசை வெண்பாக்களே. நாலடியார்ப் புலவர்கள், காரைக்கால் அம்மையார், ஔவையார், புகழேந்தி, காளமேகம் ஆகிய புலவர்பெருமக்களின் கவிதையாற்றலுக்கும் புனைதல் திறனுக்கும் சாட்சியம் வகித்த வெண்பா யாப்பு முடியரசனாரின் கரங்களில் வாழ்த்துப் பாக்களாக வழிமொழிந்துள்ளன.


பஃறொடை வெண்பா:
பஃறொடை வெண்பா, “ஐந்தடிமுதல் பன்னீரடியீறாகப் அமையும்.“2 என்பர்.
முடியரசனாரும் பஃறொடை வெண்பா யாப்பை இரு பாடல்களில் 24 அடிகளில்; பாடியுள்ளார்.’பாரதியார்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதையில்,
“வாழையடி வாழைக்கு வாய்மொழியால் வீரத்தைக்
கோழை மனத்திற் கொதிப்பேற்றிப் பாய்ச்சி விட்டான்
சூடு தணியவில்லை சொல்லெல்லாம் தீயாக்கிப்
பாடும் கவிதைகளில் பாயவிட எண்ணந்தான்;
நாடு பொறுக்குமோ என்றெண்ணி நல்லஇளஞ்
சூடு படக்கொடுத்தேன்; ஈதும் சுடுமென்றால்
குற்றம் எனதன்று; முற்றுந் தலைவாழை
பெற்ற சுவையைத்தான் பின்வாழை ஈன்றுநிற்கும்
நாநலம் கொண்டார்க்கு நல்லசுவை நல்கும்
பாநலம் வல்ல பரம்பரையில் யானொருவன்
ஈனும் கனியை இருந்து சுவைக்கவிட்டு
நானும் இருப்பேன் நயந்து”
(க.மு.பக்.126-127)
என்று பாரதி பரம்பரையில் வாழையடி வாழையாகத் தான் கவிபாடுவதை பஃறொடை வெண்பாவில் யாத்துள்ளார்.

கலி வெண்பா:
முடியரசனார் தம் கவிதைகளில்கலிவெண்பாவினை மிகுதியாகப் பாடியுள்ளார். 4875 அடிகள் கலிவெண்பா யாப்பில் பாடப்பெற்றுள்ளன.
“கலிவெண்பா பன்னிரண்டு அடிகளுக்கு மேல் பல அடிகள் வரை இயற்றப்பட்டு இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகையுடன் வெண்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று வருவதாகும்”3. ‘இம்மை நலம் துய்ப்போம்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதையில்
“வாலாட்டி நாளெல்லாம் வம்புசெயும் மாந்தரைமுப்
பாலூட்டி ஆளாக்கும் பாவலனை இவ்வுலகில்
மாந்தர் குலமனைத்தும் மாறாத இன்பத்தில்
நீந்திக் களிக்கவைத்த நேரியனைத் தீந்தமிழில்
தக்க புலவரெனச் சான்றோர் நமையுரைக்கத்
தக்கவழி நல்கும் தகவோனை மிக்க
அறியாமை என்னும் அகத்திருளை ஓட்டச்
சரியான நல்வழிகள் தந்தானை நெஞ்சில்
இடுக்கண் வருங்கால் இனிதுரைத்துத் துன்பம்
துடைத்து மகிழ்வூட்டுந் தூயவனைப் பாருலகோர்
உள்ளத்தை எல்லாம் ஒருசேர ஈரடியால்
அள்ளிக்கொண் டன்புடனே ஆள்பவனை வள்ளுவனைச்
செந்தமிழ்க்குக் காவலனைச் சென்னி மிசைவைப்போம்
சிந்தைக்குள் நல்ல திருமறையை வைத்திருப்போம்
செம்மை யுளத்தோமாய்ச் செந்நெறியில் நின்றொழுகி
இம்மைநலந் துய்த்;திருப்போம் இங்கு”
(வள்.கோ.ப.28)


என்று திருவள்ளுவரையும், திருக்குறளையும் கலிவெண்பாவில் போற்றுகிறார்.
குமுகாய அவலங்களைச் சாடுவதற்கு கலிவெண்பா வடிவத்தையே கவிஞர் பெரும்பான்மையான கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். ‘நாடு உருப்படுமோ?’ என்னும் தலைப்பிலமைந்த,
நாட்டுக்கு நன்மைசெய நாடும் அரசியலைக்
கேட்டுக்கே ஆக்கிக் கிடைத்தவெலாஞ் சுற்றுகிற
தந்நலத்தை நாடும் தகவில்லாத் தன்மையரை
இந்நிலத்தே காணுங்கால் ஏங்கித் தவிக்கின்றேன்
…………………………………………………………………………….
சாதி ஒழிப்பதெனச் சாற்றிவிட்டுத் தேர்தலுக்கு
தேதி வரும்போது சாதிக்கும் காப்பளிப்போர்
கூடி அரசியலைக் கொண்டு நடத்துவரேல்
நாடிங் குருப்படுமோ நன்கு?
(ம.தே.ப.113)
என்னும் பாடல் இதற்குச் சிறந்த சான்றாகும்.

மேலும் முடியரசனாரின் குமுகாயம் பற்றிய கவிதைகளான கொண்ட காலம் வரும் நேரம் வரும், புறமும் அகமும், வாழ்க்கைப் போராட்டம், போலிக் குடும்பம், நல்ல சமயமடா, நல்ல உலகமடா, தேர்தல் திருவிழா, நமது வாணிகம், சமுதாய வீதியிலே, திரையுலகக்கற்பு, இன்றைய மனிதன், இதுவா முன்னேற்றம், வெம்புவான் கம்பன், பாரதி கண்ட பெண்ணுரிமை, புதுமைப் பெண், தமிழின வரலாறு, நீHpன்  பெருமை, விண் குடும்பம், ஊர்வலக் காட்சி, நெல்லின் கதை, உணவு, அண்ணல் நடந்த அடிச்சுவடு, திராவிட நாட்டின் வளம் என்பன போன்ற தலைப்பிலான கவிதைகள் அனைத்தும் கலிவெண்பா யாப்பில் இயற்றப் பெற்றுள்ளன.

வெண்கலிப்பா:
“கலித்தளை மிக்கு வெண்டளை விரவி வருதல் வெண்கலிப்பாவாகும். மேலும் நான்கடி முதல் எத்தனை அடியாயினும் வந்து ஈற்றடி மூன்று சீரால் முடியும்.”4
முடியரசனார் வெண்கலிப்பா பாவகையில் 366 அடிகளில் பாடல் புனைந்துள்ளார்
தஞ்சை, கம்பன் திருநாள் கவியரங்கில் ‘கம்பன்குரல்’ என்னும் தலைப்பில் பாடப்பெற்ற,

நே நே நி நே நே நே நி நி நே நே
கன்/னித் தமிழ்/வா/ழக் கா/வியச் சுவை/வா/ழ
மாமுன் நிரை காய்முன் நேர் விளம்முன் நிரை
இயற்சீர் வெண்சீர் நிரையொன்
வெண்டளை வெண்டளை றாசிரியத்தளை

நே நே நே நி நே நே நே நி நே நி நே நே
உன்/னிப்/போ/ டிருந்/திடு/க ஊ/றுசெய்/வார் பல/ருண்/டே
காய்முன் நேர் காய்முன் நிரை காய்முன் நேர் காய்முன் நிரை
வெண்சீர்; கலித்தளை வெண்சீர் கலித்தளை
வெண்டளை வெண்டளை

நே  நி   நே    நி   நே     நே  நி நே   நே நி  நே

என்/றுரைத்/துப் புகை/யோ டே/கிவிட்/ட தவ்/வுரு/வம்
காய்முன் நேர் காய்முன் நிரை மாமுன் நேர் காய்முன் நேர்
வெண்சீர்; கலித்தளை நேரொன்றாசிரித் வெண்சீர்
வெண்டளை தளை வெண்டளை

நே நி நே நே நி நே நி நே நி நே நி நே
நின்/றிருந்/த நான்/வணங்/கி நிமிர்/கை/யிலே கை/நழு/விப்
காய்முன் நேர் காய்முன் நேர் காய்முன் நிரை கனிமுன் நேர்
வெண்சீர்; வெண்சீர்; கலித்தளை ஒன்றாத வஞ்சித்
வெண்டளை வெண்டளை தளை

நே நே நே நே நே நி நி நேர் நே நி நே
பொத்/தென்/று வீழ்ந்/து புரண்/டது/கைப் புத்/தகந்/தான்
காய்முன் நேர் காய்முன் நேர் மாமுன் நிரைகாய்முன் நேர்
வெண்சீர்; வெண்சீர்; இயற்சீர் வெண்சீர்; வெண்டளை வெண்டளை வெண்டளை வெண்டளை

    நே  நே  நே  நி  நே  நி    நி   நே நே  நே  நி  நே
    மெத்/தென்/ற  படுக்/கை/மிசை  விதிர்ப்/புற்/றுக் கண்/விழித்/தேன்

காய்முன் நேர் காய்முன் நிரை கனிமுன் நிரை காய்முன் நேர்
வெண்சீர்; கலித்தளை ஒன்றிய வெண்சீர்; வெண்டளை வஞ்சித்தளை வெண்டளை

    நே நே      நி  நி  நே    நி  நி நி    நி   நி  நே 
     கம்/பன்     புகன்/றக/தை   கவி/பா/ட    உத/வுமென்/று

காய்முன் நேர் மாமுன் நிரை காய்முன் நிரை கனிமுன் நேர்
வெண்சீர்; இயற்சீர் கலித்தளை ஒன்றிய வெண்டளை வெண்டளை வஞ்சித்தளை

நே நே நி நி நே நே
நம்/பிக் கவி/புனைந்/தேன் நான் (முடி.க.ப.168)
காய்முன் நேர் மாமுன் நிரை காய்முன் நேர்
வெண்சீர்; இயற்சீர் வெண்சீர் வெண்டளை வெண்டளை வெண்டளை
என்னும் கவிதையில் இயற்சீர் வெண்டளை- 4, வெண்சீர் வெண்டளை- 15, கலித்தளை- 6, ஒன்றிய வஞ்சித்தளை- 2, ஒன்றாத வஞ்சித்தளை- 1, நேரொன்றாசிரித்தளை-1, நிரையொன்றாசிரியத்தளை- 1 பயின்று வந்துள்ளன. எனவே இது வெண்சீர் வெண்டளை விரவி வந்த வெண்கலிப்பாவாகும்.

நேரிசையாசிரியப்பா:

இப்பா, மாச்சீர், விளச்சீர் பெற்று நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை என்னும் தளைகளைப் பயின்று  ஈற்றயலடி முச்சீராயும், ஏனைய அடிகள் நாற்சீராயும் வரும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் அமைந்திருக்கும். மூன்றடிச்சிற்றெல்லையும், பாடுபவரின் உள்ளக் கருத்திற்கேற்பப் பேரெல்லையும் கொண்டு அமையும். அகவல் ஓசையால் பாடப்பெறும்5.
 முடியரசனார் பாடல்களில் நேரிசையாசிரியப்பா யாப்பில் 716 அடிகள் பயின்று வந்துள்ளன.    'எனக்கும் ஓர் அதியன்' என்ற தலைப்பில்,
    "குறள்நெறி வாழும் கொள்கைக் கோவே!
    அருள்நெறி ஒழுகும் அண்ணால்! எங்கள்
    சுப்பிர மணியத் தோன்றால்! வணக்கம்
    மெய்ப்பொருள் உணர்ந்த மேலோய்! வணக்கம்
    தந்தாய்! என்னுயிர் தந்தாய்! என்கோ?
    அன்னாய்! என்னுயிர் அன்னாய்! என்கோ?
    இன்னருள் புரியும் என்கோ! என்கோ?
    எவ்வணம் நின்னை ஏத்திப் புகழ்வேன்!
    செய்வணம் அறியேன் சிறியேன் நின்னடி
    நெஞ்சத் திருத்தி நினைவேன்
    அஞ்சலென் றருளுக தஞ்சம் நீயே" (க.மு.ப.80)

என்று அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் தன்னுயிர் காத்து உடற்பிணி நீக்கியமையை நேரிசையாசிரிய யாப்பில் பாடியுள்ளார்.

பாவினம்:-
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களின் இனங்களான ‘தாழிசை, துறை, விருத்தம்’ ஆகிய மூன்று பாட்டுகளும் தனித்தனியே இனமாய் வருதல் ‘பாவினம்’ எனப்படும்.
இப்பாவினம் குறித்து,”தாழம் (மந்தம்) பட்ட ஓசையொடு வருவதனைத் தாழிசை என்றது காரணப்பெயர். தத்தம் பாவிற்குத் துறைபோல வருவது துறை எனப்படும். விருத்தம் என்பது நிகழ்ச்சியைக் கூறுவது”என்பர் அ.கி.பரந்தாமனார்.
முடியரசனார் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்களைப் பயன்படுத்தி கவிதைகள் படைத்துள்ளார். கவிஞர் தம் பாடல்களில் எட்டு தாழிசைகள் பயின்று வந்துள்ளன.

நிலை மண்டில ஆசிரியப்பா:
“நிலைமண்டில ஆசிரியம் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, அடிகள் எல்லாம் அளவடிகளாய் அமைந்திருக்கும். ‘என்’ என்னும் அசைச்சொல்லிலோ, ஏகாரத்திலோ நிறைவுற்றிருக்கும்.”6 
முடியரசனார் தம் கவிதைகளில் நிலை மண்டில ஆசிரியப்பாவை அதிகம் கையாண்டுள்ளார். 8292 அடிகள் நிலைமண்டில ஆசிரிய யாப்பில் பாடப்பெற்றுள்ளன. முடியரசனாரின் ‘ஒற்றுமையும் ஒருமையும்’7 என்னும் தலைப்பில் அமைந்த,
“ஒற்றுமை எனவும் ஒருமை எனவும்
சொற்றிடும் இருசொலைச் சற்றிவண் நோக்குதும்
வேறுபடு பொருள்களைக் கூறிடும் அவற்றுள்
சாரும் பொருண்மை தேறுதல் நம்கடன்
ஒன்றுடன் மற்றொன் றிணைவதே ஒற்றுமை
ஒன்றினுள் ஒன்று மறைவதே ஒருமை
மலைப்பினி வேண்டா மனத்தினிற் பொருந்த
இலக்கணச் சொல்லால் விளக்குதும் கேண்மின்;
பலபல எனுஞ்சொல் கலந்தே நிற்கும்;
முன்னதை அடுக்குத் தொடரென மொழிவர்
பின்னதை இரட்டைக் கிளவியென் றியம்புவர்;
அடுக்குத் தொடரென ஆகுவ தொற்றுமை
இரட்டைக் கிளவியென் றிருப்பதே ஒருமை;
இடர்ப்படல் தவிர்த்தினி இருவகைப் பொருளும்
மனத்தினில் தெளிகநும் மயக்கமும் விடுத்தே
” (பு.வி.செ.ப.150 )
என்ற பாடல் இதற்குச் சிறந்த சான்றாகும்.

கலித்தாழிசை
‘தோற்றுவிட்டேன்’ என்னும் தலைப்பிலமைந்த,
‘போர்க்களத்தில் எதிர்நிற்க எவருங் காணேன்
பூரித்தேன் வீரத்தாற் செருக்குங் கொண்டேன்
தார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும்
தளிரடியால் எனை மிதித்தாய் தோற்றுவிட்டேன்
………………………………………………………………………………………..
……………………………………………………………………………….
எழுதரிய ஓவியமே! என்றன் நெஞ்சில்
எழுந்துநடம் செயுந்தேவே! எங்கள் காதற்
பழந்தந்த சுவையே!எப் படியோ என்னைப்
பணிவித்து நல்லாட்சி செலுத்து கின்றாய்! (முடி.க.ப.93)

என்னும் பாடல் கலித்தாழிசையில் அமைந்துள்ளது. இதனை கலிஒத்தாழிசை என்றும் வழங்குவர்.

கலித்துறை:
முடியரசனார் கவிதைகளில் கலித்துறைப் பாடல்கள் எட்டும், கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் ஆறும் அமைந்துள்ளன.ஊன்றுகோல் காப்பியத்தில் கலித்துறை யாப்பில்,
“உண்பதும் ஓய்வதும் என்பயன்
தந்தன உற்றறிவால்
எண்ணு கநற்பணி செய்திட
நண்ணுக என்றிசைத்தே
வண்முகில் போலுளங் கொண்டவர்
வாழ்பல வான்குடியில்
கண்மணி வாசகச் சங்கமென்
றொன்றனைக் கண்டனரே
………………………………………………………
………………………………………………………
ஏசாச் சிறப்பின் எழில்ராம
சாமி எனுமவர்க்குக்
காசாற் பெறவிய லாத
கலையெழில்; காட்டினரே”
(ஊ.கோ.11:18-21)
என்று நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

கட்டளைக் கலித்துறை:
எழுத்து எண்ணி இயற்றும் ஒரு வகைக்கலித் துறையைக் கட்டளைக் கலித்துறை என்பர். இத்தனை எழுத்து இப்படித் தொடங்குவதற்கு வரவேண்டும் என்னும் நியதி அல்லது கட்;டளைக்குட்பட்டு இக்கலித்துறை வருவதால், இவ்வகைக் கலித்துறைக்கு ‘கட்டளைக் கலித்துறை’ என்று பெயர்.
“கட்டளைக் கலித்துறைக்குரிய இலக்கணம் நான்கு அடிகளில் அமைந்திருக்கும். ஒவ்வோரடியும் நெடிலடியாய் ஐந்து சீர்கள் கொண்டு ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரும் கூவிளங்காயாகவோ, கருவிளங்காயாகவோ இருக்கும். அருகில் கூவிளங்காய்க்கு ஈடாகத் தேமாங்கனிச் சீரும் கருவிளங்காய்க்கு ஈடாகப் புளிமாங்கனிச் சீரும் வருதலுமுண்டு. மெய்எழுத்துகளை நீக்கி நேரசையில் முதற்சீர் தொடங்கும் அடியில் 16 எழுத்துகள் இருக்க வேண்டும். நிரையசையில் முதற்சீர் தொடங்கும் அடியில் 17 எழுத்துகள் இருக்க வேண்டும். நான்கடிகளுக்கும் ஒரே எதுகை வர வேண்டும். முதல்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை இருத்தல் சிறப்பு. பெரும்பாலும் முதற்சீHகள் நான்கும் ஈரசைச்சீர்களாகவே வரும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும்”8என்று சுட்டப்பெறுகிறது. கவிஞர் தம் மாணவப்பருவத்திலேயே ‘உதவுவையே’ என்னும் தலைப்பில்,

1 2 3 4 5
“பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம் 1
கற்றா னிலைசீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச் 2
சற்றாகினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா 3
உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே” 4
(நெஞ்.பூ.ப.278)
என்று நேரசையை முதலாக உடைய கட்டளைக் கலித்துறை யாப்பில் கவி பாடியுள்ளார். இதில் ஒவ்வோரடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக 16 எழுத்துகள் இருத்தலைக் காணஇயலும்.

அறுசீர் விருத்தம்:
“கழிநெடில் நான்கு ஒத்து இறுவது குறைவில் தொல்சீர் அகவல் விருத்தம்”9 என்கிறது யாப்பருங்கலக் காரிகை.
முடியரசனார் கவிதைகளில் அறுசீர் விருத்த யாப்பில் 588 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.’நீர்ப்பானை ஓட்டையானால்..’ என்னும் தலைப்பில் சாதி ஒழிப்பின் தேவையை,
தமிழரெலாம் ஒன்றானார் தமிழர்க்குப்
பகைவரெலாம் தாழ்ந்து போனார்
அமிழ்தனைய இம்மொழியை அகம் மகிழ
என்செவியில் ஆரு ரைப்பார்?
இமிழ்கடல்சூழ் இவ்வுலகில் எந்தமிழர்
சாதியினை எரித்தே விட்டார்
தமிழினந்தான் இனியுண்டு தலைநிமிர்ந்து
வாழ்வரெனச் சாற்று வார்யார்?
(பு.வி.செ.ப.166)
என்று அறுசீர் விருத்தத்தில் உரைப்பர்.
கழிநெடிலடிகள் (ஐந்து சீர்களுக்கு மேலான) நான்கு சீரின் அளவில் ஒத்து முடிவது குறைபடுதல் இல்லாத சீHகளையுடைய அகவல் விருத்தமாகும். அகவல் விருத்தம் அறுசீர்விருத்தம் முதல் முப்பத்திரண்டு சீர்விருத்தம் வரையில் உண்டு. பதினான்கு சீர் விருத்தத்திற்கு மேற்பட்டு வரும் விருத்தப்பாடல்கள் பாட்டாக இரா; உரைநடை போலவேயிருக்கும், அறுசீர் விருத்தம் முதலானவை ‘கழிநெடிலடிஆசிரிய விருத்தம்’ என்றழைக்கப்படும்.”10
முடியரசனார் எழுசீர் விருத்த யாப்பில் 25 பாடல்கள் இயற்றியுள்ளார்.ஊன்றுகோல் காப்பியத்தில் சபை காண் காதையில் எழுசீர் விருத்தத்தில்,
கணக்கிட்டுச் செட்டோடு வாழுமவர்
கல்விக்குக் கணக்கின்றி வழங்கி வந்தார்;
பணக்கட்டுப் பாடின்றி வழங்கியதால்
பாரிலுளார் வள்ளலென அவரைச் சொன்னார்;
மணக்கட்டும் அறிவுமணம் மலரட்டும்
கலைமலர்கள் எனவிழைந்து செல்வ நீரை
அணைக்கட்டுப் போடாமல் திறந்துவிடும்
அழகுளத்தைப் பெருமனத்தை வியவார் யாரே
?” (ஊ.கோ.ப.54)
என்று வள்ளல் அழகப்பர் போன்றோரை வாழ்த்துகிறார்.
முடியரசனார் கவிதைகளில் எண்சீர் விருத்த யாப்பில் 1995 பாடல்கள் அமைந்துள்ளன.’அழகப்பர்’ என்னும் தலைப்பிலான பாடலில் எண்சீர் விருத்தத்தில்,
அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்
அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான்
உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான்
உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ!
வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான்
உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும்
உயிருளதே கொள்கவென சாவுக் கீந்தான்
(க.மு.ப.65)
என்று வள்ளல் அழகப்பரின் வள்ளன்மையைப் புகழ்ந்துரைப்பர்.
‘வேண்டுவன’ என்னும் தலைப்பில் மற்றுமொரு புதிய வடிவத்தில்,
குணத்தாலும் உடலாலும்
அழகு மிக்க
குமரிஎனை மணந்தின்பம்
கொடுக்க வேண்டும்;
கணக்கோடு மகப்பேறு
நிகழவேண்டும்;
கள்ளமிலா நண்பருடன்
தொடர்பு வேண்டும்;
மணத்தோடு தென்றல்வந்
துலவு கின்ற
மாடியுள்ள வீடொன்று
வேண்டும்; வாழ்வு
பணத்தாலே இடரின்றி
நடத்தல் வேண்டும்

புகையில்லா அருளுள்ளம்
இருத்தல் வேண்டும்”
(முடி.க.ப.75)
என்று தனக்கு வேண்டுவனவற்றை அடுக்கிக் காட்டுவர். இது பாரதியின் காணிநிலம் வேண்டும் என்னும் பாடலை ஒத்துள்ளமை சுட்டுதற்குரியது.

பன்னிரு சீர் விருத்தம்:
தமிழன்னை பிள்ளைத்தமிழின் காப்புப் பருவப் பாடலில்,

    "கலவைகள் விலகிடத் தனிமொழி உலவிடக்
            கருதிய முதல்மகனாம்
        கலைபல தெரிவுறு மறைமலை யடிகளைக்
            கருதிவ ணங்கிடுவோம்
    குலமொழி அடிமுதல் தெளிவுறும் படிவளர்
            கூர்மதிப் பாவாணர்
        குளிர்மிகும் மலரடி வழிதரும் எனமனங்
            கொண்டுப ணிந்திடுவோம்
    உலகினில் முதன்முதல் நிலவிய மொழியெனும்
            உரைபெறுந் திருமகளாம்
        உயர்தனி மொழியென அயலவர் புகன்றிட
            ஒளிதரு செம்மகளாம்
    அலைபல எதிரினும் நிலைபெறும் கலைமகள்
            அமுதெனும் மொழியினளாம்
        அழகிய கழகமொ டுலவிய தமிழ்மகள்
            அணிநலம் புரந்திடவே" (தா.கா.ப.102)

என்று தமிழ்ப்பணியாற்றிய மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரை பன்னிரு சீர் விருத்தப்பாவில் வணங்குவர்.
பதினான்கு சீர் விருத்தம்:
‘பொதுமை காண்போம்’ என்னும் தலைப்பில் பதினான்குசீர் விருத்தத்தில்,
“வறுமை மிக்கு வலிமை கெட்டு
வறியார் வாடும் போதிலே
வலியர் மட்டும் வளமை யுற்று
வளர்வ தென்ன நீதியோ?
பொறுமை யற்றுப் புலிநி கர்த்துப்
பொதுமை காணும் போரிலே
புரட்சி தோன்றும் புதிய போக்கில்
புரளி என்ன நேருமோ?
இருமை போக ஒருமை காண
இறைவன் சொற்ற பாட்டிலே
இடரி லாத வழிகள் காண
இறங்கி வாரும் நாட்டிலே
வறுமை போக வளமை சேர
விழிகள் யாவை? தேடுவோம்
வளரும் நாடு பொதுமை யாகி
வாழ்க என்று பாடுவோம்”
(பு.வி.செ.ப.118)
என்று பொதுமை காண அழைப்பு விடுப்பர் கவிஞர்.


‘புலியேறென  எழுவாய்’ என்னும் தலைப்பிலமைந்தது பதினாறு சீர்ச் சந்த விருத்தமாகும். (முடி.க.ப.117)

புலியேறென எழுவாய்

பதினாறுசீர்ச் சந்த விருத்தம்

உழுவார்கரம் உயர்வாய்வர
    உலகோர்முயல் திருநாள்
உனதாகிய திருநாடொரு
    தமிழ்நாடென வருநாள்
குழுவார்கழை பிழிபாகுடன்
    முறியாமுனை அரிசி
குழைவாயமு துணவாகிடக்
    குலமாதர்கள் தருநாள்

எழுஞாயிறு புலர்காலையில்
    எழில்வான்மிசை வருமே
இதுநாள்வரை துயராய்வரு
    பனிநாள்இனி அறுமே
தொழுவாய்கதிர் தொழுவாய்கதிர்
    சுடரால்நலந் தரலால்
சுடுவாய்பகை விடுவாய்மயல்
    துணிவாயெழு தமிழா

புழுவாவுனை இகழ்வார்முனம்
    புலியேறென எழுவாய்
பொதுவாழ்வினில் நிலையோடிரு
    புதுவாழ்வினை அடைவாய்
தொழுதேவளர் உடல்வாழ்வது
    தொலையாயெனில் உனையே
தொழுநோயொடு திரிவாரினும்
    இகழ்வாரிதை நினைவாய்

மொழிவாழவும் இனம்வாழவும்
    முயல்வாய்தமிழ் மகனே
முரணாதொரு முகமாயெழு
    முடியாததும் உளதோ?
இழிவாகிய நிலைஓடிட
    எடுவாள்பகை மலையோ?
எழுவாய்தலை நிமிர்வாய்உனை
    எதிர்வாரினி இலையே

"விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்பது வழக்கு. இது குறித்து "விருத்தம் என்பது விகற்பங்கள் கொண்டது; அதில் நான் எழுதுகிறேனே என்று வருததத்தோடு பாயிரம் பாடினான் கம்பன். ஆயினும் அற்புதமான விருத்தங்கள் அவனிடமிருந்து பிறந்தது"11 என்பர் கவிஞர் கண்ணதாசன். 

கம்பனுக்கும் பிறகும் விருத்தம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை முடியரசனாரின் விருத்தப்பாக்கள் காட்டும். இதைக் கவிஞர் கண்ணதாசனின் மகன் அவரிடம் கவிதை எழுதச் சொல்லித்தாருங்கள் என்று கேட்டபோது கண்ணதாசன் அவர்கள் முடியரசனாரின் கவிதை நூல்களைக் கொடுத்து இதைப் படித்தால் போதும் நீ பெரிய கவிஞனாகி விடுவாய்”12 என்றுரைத்ததும் முடியரசனாரின் யாப்பு ஆளுமைக்குச் சிறந்த சான்றாகும்.

உள்ளடக்கத்துக்குத் தகுந்த புற அமைப்பு:
முடியரசனாரது ஊன்றுகோல் காப்பியத்தில் கலிவெண்பா 28 அடிகளும் நேரிசையாசிரியப்பா 161 அடிகளும் நிலைமண்டில ஆசிரியப்பா 582 அடிகளும் அறுசீர் விருத்தம் 148 பாக்களும் எழுசீர் விருத்தம் 18 பாக்களும் எண்சீர் விருத்தம் 160 பாக்களும் கலித்துறை 4 பாக்களும் கட்டளைக் கலித்துறை 4 பாக்களும் பயின்று வந்துள்ளன. வீரகாவியம் முழுமையும் எண்சீர் விருத்த யாப்பிலும், பூங்கொடி காப்பியம் முழுமையும் நிலைமண்டில ஆசிரியப்பாவிலும் பாடப் பெற்றுள்ளன.
‘முடியரசன் கவிதைகள்’ நூலில் முதலிரண்டு குறுங்காவியங்களும் (நெடுங்கவிதைகளும்) நிலைமண்டில ஆசிரிய யாப்பில் அமைந்தவை. அவற்றில் முதலாவதாக அமைந்தது பாரசீகக் கவிஞர் நிசாமி படைத்த கோசுரு சிரீன் என்னும் பெருங்காப்பியத்தைத் தழுவி எழுதப்பட்டது. இரண்டாவது குறுங்காவியம் (நெடுங்கவி;தை) மணிமேகலை காப்பியத்தில் இடம் பெற்றுள்ள சுதமதியின் வரலாற்றை விரிவு படுத்தி எழுதப்பட்டது.
சிலப்பதிகாரக் காப்பிய மாந்தர் மாதவியைப் பற்றிய ‘மாதவி’ என்னும் கவிதையும் நிலைமண்டில ஆசிரிய யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. பூங்கொடி காப்பியத்திற்கும் வேறு காப்பியங்களின் பாத்திரங்களைக் கருவாய் கொண்டுள்ள நெடுங் கவிதைகளுக்கும் இவ் யாப்பையே பயன்படுத்தியுள்ளார்.
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன நிலைமண்டில ஆசிரிய யாப்பில் பாடப்பட்டுள்ளமை இங்கு சுட்டுதற்குரியது. அவ்வகையில் இளங்கோவடிகள், சீத்தலைச்சாத்தனார் போன்ற காவியப் புலவர்களோடு ஒப்பவைத்து என்னும் பெருமைக்குரியராய் வீறுகவியரசர் விளங்குகின்றார். இயற்கையை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளை முடியரசனார் பாடும் பொழுது விருத்தப் பாவினையே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். சிற்சில கவிதைகளை வேறுவகை யாப்பிலும் பாடியுள்ளார். ‘இயற்கையின் எழுச்சி’ என்னும் தலைப்பில் நேரிசையாசிரியப்பாவும், ‘படைத்தோன் வாழ்க’ என்னும் தலைப்பில் நிலைமண்டில ஆசிரியப்பாவும் பாடியுள்ளார். இவை போன்று மிகச் சிலவான கவிதைகளைத் தவிர பெரும்பாலானவை விருத்தப்பாவில் அமைந்தவையே.
‘இயற்கை உலகம்’ என்னும் தலைப்பில் எண்சீர் விருத்தத்தில்,
கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக்
காட்சிதரும் குஞ்சுகள்தம் வாயில் கோழி
வேல்மூக்கால் அன்புகலந் திரையை ஊட்டும்
வேளையிலும் வானத்து வீதி செல்லும்
பால்மதியப் பெண் தனது விண்மீன் என்னும்
பல்விரித்துச் சிரிக்கின்ற போதும், மண்மேல்
கால்மடித்துத் தவழ்கின்ற குழந்தை பேசும்
காலத்தும் நல்லழகின் சிரிப்பைக் கண்டேன்”
(முடி.க.ப.37)
என்று ஒரு கோழி மற்றும் குழந்தையின் செயல்களில் தான் கண்ட அழகினைக் காட்சிப்படுத்துவர். இது போன்று எழில், நிலவு, ஆறு என்னும் கவிதைகள் எண்சீர் விருத்த யாப்பில் காய் காய் மா தேமா, காய் காய் மா தேமா என்னும் சீH வரிசை அடுக்கில் வந்து தனதன தனதன தன தன, தனதன தனதன தன தன என்னும் சந்தக் குறிப்புடன் அமைக்கப் பெற்றுள. கவிஞர் அறுசீர் விருத்தத்திலும்
“வளைந்துள்ள வெண்ணிறத்துப் பிறை நிலவே
வானத்தில் கப்பல் என்று
தளைந்துள்ள முகிலலையின் நடுவிடத்தே
தவழ்ந்தோடச் செய்தாள்; இன்பம்
விளைந்துள்ளம் களிகூரப் பகலெல்லாம்
விளையாட இருட்பு லத்தைப்
பிளந்தெழும்பும் கதிரவனைப் பந்தெனவே
பிள்ளையெனக் களித்தாள் அன்னை
” (முடி.க.ப.42)
என்று இயற்கையைப் பாடியுள்ளார். இதே போன்று காற்று, கடல், மயில் என்னும் தலைப்பிலமைந்த கவிதைகளும் அறுசீர் விருத்தத்தால் பாடப்பெற்றுள.
இயற்கையைப் பாடுபொருளாகக் கொண்ட அறுசீர் விருத்த யாப்பினை மற்ற பிற உள்ளடக்கத்திலிருந்து வேறுபடுத்தி காய் காய் காய், காய் மா மா என்னும் சீர் வரிசை அடுக்கில், தனதன தனதன தனதன தனதன தன தன என்னும் சந்தக் குறிப்பில் அமைந்துள்ளார்.
காதலை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளிலும் விருத்தப் பாக்களே அதிகம் பயின்று வந்துள்ளன. சிற்சில விதிவிலக்காக காதல் நெஞ்சம் நேரிசை வெண்பா யாப்பிலும் குளிர் நிலாநேரிசை ஆசிரிய யாப்பிலும் எம்மவர் தந்தார்நிலை மண்டில ஆசிரிய யாப்பிலும் பாடப் பெற்றுள்ளன.
‘ஏன் வரவில்லை?’ என்னும் தலைப்பிலமைந்த அறுசீர் விருத்தத்தில்,
அகத்தியின் குவிபூத் தோற்றம்
அன்னதோர் பிறைநி லாவே!
பகற்பொழு தகலும் நேரம்
பார்த்ததும் வருவேன் என்றாள்
இகழ்ச்சியோ செய்கின் றாள்என்
றேங்கிடும் உள்ளம் ஆங்கே
பகர்ந்ததை மறந்தா போனாள்?
பாவைஏன் வரவே இல்லை?”
(முடி.க.ப.73)
என்று விளம் மா தேமா, விளம் மா தேமா என்னும சீர் வரிசை அடுக்கில் ‘தனன தன தன தனன தன தன’ என்ற சந்தக் குறிப்பில் பாடியுள்ளார்.
மொழியுணர்வை உள்ளடக்கிய கவிதைகள் பெரும்பான்மை விருத்தப் பாவில் அமையப் பெற்றுள்ளன. மொழியுணர்ச்சி, அவளும் நானும், தமிழ்க் காதலி, உறுதி கொள்வீர், தமிழ் வாழ்வு, தமிழ்த் தொண்டு, தமிழ் வணக்கம், தமிழ் காப்போம், கனன்றெழு, உயிர் கொடுப்போம், சாவுக்கும் அஞ்சோம், வாகை கொள்வோம், இனி விடோம், மாவீரன் பலருண்டு, தமிழே வெல்லும் போன்ற கவிதைகள் எண்சீH விருத்தத்தில் பாடப்பெற்றுள்ளன.
முடியரசனார் கவிதைகளில் தமிழ்தான் என் பேர், துறைதோறும் தமிழே காண்பீர், தமிழ் வாழ்த்து, பிரிந்து போ, உய்யுமோ தமிழர் நாடு போன்ற அறுசீீீர் விருத்தப்பாக்கள் விளம் மா தேமா, விளம் மா தேமா என்னும் சீர் அடுக்கு வரிசையில், ‘தனன தன தன, தனன தன தன’ என்னும் சந்தக் குறிப்பில் பாடப்பெற்றவை ஆகும்.
உருக்கிடு தமிழிற் சொன்ன
ஒருமறை அறியா ராகி
அருத்தியில் தழுவிக் கொண்ட
அயலவர் மறையே சொன்னார்
திருக்குறள் எங்கள் வாழ்க்கைத்
திருமுறை என்று கூற
ஒருத்தரை இங்குக் காணேன்
உய்யுமோ தமிழர் நாடு?
“(வ.கோ.ப.93)
என்னும் பாடல் இதற்குத் தக்க சான்றாகும்.
முடியரசனார் அறுசீர் விருத்தங்களில் இயற்கையை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளில் ‘காய் காய் காய், காய் மா மா’ என்னும் சீர்வரிசை அடுக்கிலும், பிற உள்ளடக்கங்களில் அமைந்த அறுசீH விருத்த யாப்பினை ‘விளம் மா தேமா, விளம் மா தேமா’ என்னும் சீர்வரிசை அடுக்கிலும் அமைத்துப் பாடியுள்ளார். அறுசீர் விருத்தங்களை உள்ளடக்கத்திற்குத் தகுந்தவாறு மாற்றியமைத்திருப்பது சுட்டத்தக்கது.
“ஒரு குறிப்பிட்ட ஓசையை மட்டும் பயன்படுத்திக் கவிதைகளை வளர்த்துச் செல்லுதல் உயிரற்றது. தொடர்ந்து படித்தலாகிய ஆர்வத்திற்குத் தடையமைப்பது. எனவே, உணர்ச்சிக்குத் தக்கவாறு ஓசையை மாற்றி மாற்றி அமைத்தல் தேவையாகிறது.”13
“கவிஞன் கருத்தில் இசை செய்யுளின் கதியாக உருவெடுத்து வெளிவந்து ஒழுகுகின்றது. காலகட்டங்களுக்குத்தக்கவாறும், அங்கு கூறவேண்டிய கருத்துக்களுக் கேற்பவும் விருத்தவகைகள் தாமாகவே மாறுவது போல் மாறிவிடுகின்றன.”14 என்பன போன்ற கருத்துகள் வீறுகவியரசரின் யாப்புப் பயன்பாட்டியலுக்கு முற்றிலும் பொருந்துகின்றன.

முடியரசனாரின் இசைப்பாடல் வடிவம்:
இயற்றமிழ் கவிதைகள் படைத்தது போலவே, இசைத் தமிழுக்கு மொழி – இனம் – நாடு – காதல் – அறம் முதலிய உள்ளடக்கங்களை மையமாக கொண்ட தமிழிசைப் பாடல்களைக் கவிஞர் இயற்றியுள்ளார்.
முடியரசனார் கவிதைகளில் 200 இசைப்பாடல்கள் அமைந்துள்ளன. தமிழிசைப் பாடல்கள் முழுவதுமாய் அமையப் பெற்ற காவியப்பாவை நூலும், சந்த நயத்துடன் பாடுவதற்கேற்ற பனுவல்களின் தொகுப்பாய்ப் பாடுங்குயில் நூலும் பாடப்பெற்றுள்ளன. ‘பொற்கிழி பெற்றவன்’ என்னும் தலைப்பிலான,
சேரன் நல்லிளங் கோவின் நூலினைச்
சிந்தை மேவிய ஆசையால்
ஓரும் நுண்புலம் கொண்டு தேர்ந்ததை
ஓதி உண்மகிழ் வுற்றவன்
யாரு மேமணம் சேரும் நட்பினை
ஆக்கும் புன்னகை கொள்முகன்
ஊரும் வாழ்த்திட நாடும் ஏத்திட
ஓங்க பாமொழி வாயினன்
…………………………………………………….
…………………………………………………
சோம சுந்தர நாமம் மேவிய
தோழ னாமவன் வாழ்கவே”
(ம.க.கொ.ப.227)
என்னும் பாடல் “மானின் நேர்விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவி! கேள்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பண் அடிப்படையில் அமைந்துள்ளது.

கீர்த்தனை:
பல்லவி, அநுபல்லவி, சரணம் என்பவற்றைப் பெற்றுத் தாளமும் முறையும் வழுவாமல், இராகதாளம் சேர்த்து, இசையறிவு வல்லோரால் பாடப்படும் பாடல் கீHத்தனையாகும். முடியரசனார் பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய சொற்களுக்குப் பதிலாக தூய தமிழில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்னும் சொற்களைப் பயன்படுத்தி கீர்த்தனைகளைப் புனைந்துள்ளார்.
‘தமிழில் பாடு’ என்னும் தலைப்பிலமைந்த கீHத்தனையில்,
எடுப்பு
பாடுவ தென்றால் தமிழினில் பாடு
பாவையே உளமகிழ் வோடு! – (பாடு)


தொடுப்பு
வாடிடும் என்மன வேதனை தீர்ந்திட
வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப் – (பாடு)


முடிப்பு
வையம் பெற்றது தமிழ்மொழியாம் – அதன்
வழி வழி வந்தன பிறமொழியாம்
ஐயம் இல்லை உண்மையிதாம் – கண்ணே
அருமைத் தமிழே நமதுயிராம் – (பாடு)


இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய் – மன
இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய்
வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம் – என
வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய் – (பாடு)


நன்மைகள் செய்ய முயன்றிடுவாய் – இன்றேல்
நலிவுகள் செய்திட முனையாதே
என்னும் மேலோர் அறவுரையை – நல்ல
எழிலொடு காதலை வீரமதை (கா.பா.ப.8)


என்று தமிழில் பாட வலியுறுத்துவர்.


எங்கள் நாடு, மறவர் நாடு, வாழ்க தாயகம், ஆடினாள், பிள்ளைக் குறும்பு, நாடகம் ஆடுகிறான், தேடிய எழில், ஆடு மயிலே!, மாமியும் மருமகளும்!, அத்தர் விற்போன், விளம்பர உலகம் ஆகிய தலைப்பிலமைந்த பாடல்கள் தொடுப்பு இன்றி எடுப்பு, முடிப்பு மட்டும் அமையப் பெற்றவை.
நாணம் ஏனோ? என்னும் பாடலில் முடிப்பு இன்றி எடுப்பு, தொடுப்பு மட்டும் கொண்ட வடிவம் காணப்பெறுகிறது.
‘நெஞ்சிற் பூத்தவை’ நூலில் காதலர் சொல்லாடல், பருவப் பேச்சு, காவிய மேடையில், அதுவா இதுவா, பேதமேது? ஆகிய பாடல்களும் ‘காவியப்பாவை’ நூலில் நடந்தது என்ன?, விளையும் பயிர், வீணை மீட்டுவோம் ஆகிய பாடல்களும் உரையாடல் வடிவில் அமைந்தவை.
‘கண்ணாடி மாளிகை’ என்னும் திரைப்படத்திற்காகச் சிரித்தமுகம், சீரழிந்து போகாதே, பொய்மைகள் மாயும், மையல் தீர, முகக்கண்ணாடி, பேதமேது?, சிரிப்பதேனடி? ஆகிய பாடல்களையும் கவிஞர் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவாக
பாரதிதாசன் பரம்பரையின் முதல்வராக, “என் மூத்த வழித்தோன்றல”; என்று பாவேந்தராலேயே பாராட்டப் பெற்ற பெருமைக்குரிய வீறுகவியரசர் முடியரசனார், தம் கவிதைகள் அனைத்தும் மரபான வடிவம், புதிதான கருத்து, தரமான நெறி என்னும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறப்பிற்குரியன. செப்பலோசைச் செல்வராக விளங்கும் முடியரசனாரின் வெண்பாக்களில் பெரும்பாலான நேரிசை, பஃறொடை வெண்பாக்களாய் அமைந்து சிறப்பிக்கின்றன.
அனைத்துவகைப் பாக்களும் புனையும் வல்லமையுடைய முடியரசனார்; விருத்தப்பாவை மிகுதியாக (2608 பாக்கள்) இயற்றியுள்ளார். விருத்தப் பாக்களில் எண்சீர் விருத்தம் மிகுதியாகவும், அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், பன்னிரு சீர் விருத்தம், பதினான்கு சீர் விருத்தம், பதினாறு சீர்விருத்தம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டுள.
புதருள்கனி, வேண்டுவன என்னும் கவிதைகள் வேறுயாரும் பாடாத எண்சீர் யாப்பு வடிவத்தில் அமைந்துள. இயற்கையை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளைப் பாட விருத்தப்பா யாப்பினையே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார்.
இயற்கை பற்றிப் பாடுவதற்கு அறுசீர் விருத்தங்களைக் கையாண்ட முடியரசனார் அதனை காய் காய் காய் காய் மா மா என்னும் வாய்பாட்டில் அமைத்துள்ளார். மேலும் இயற்கை, காதல், மொழியுணர்வு போன்ற பாடுபொருளை விளக்க எண்சீர் விருத்த யாப்பினைக் கையாண்டு காய் காய் மா தேமா, காய், காய் மா தேமா என்னும் சீர் வரிசை அடுக்கில் பாடியுள்ளார்.
குமுகாயம் பற்றிய உள்ளடக்கக் கவிதைகளில் கலிவெண்பாவினை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். கலிவெண்பாக்கள் அனைத்தும் இன்னிசைக் கலிவெண்பா வகையிலேயே இயற்றப்பட்டுள்ளன.
அடி அளவில் நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பில் 8292 அடிகளும், அதற்கடுத்த நிலையில் கலிவெண்பா யாப்பில் 4875 அடிகளும் மிகுதியாகப் பாடப்பெற்றுள. முடியரசனார் காப்பியம் பாடுவதற்கும் நெடுங்கவிதைகளுக்கும் நிலைமண்டில ஆசிரிய யாப்பைக் கையாண்டுள்ளார்.
இசைப்பாடல்களில் பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்ற சொற்களை மாற்றித் தூயதமிழில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று பெயர்களிட்டு இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
மரபு மாறாமல் இலக்கண வரம்பிற்குள் நின்று உயரிய இனிய அழகிய ஒண்டமிழ்ச் சொற்களால் நற்கருத்துகளை கவிதையாக்குவது மட்டுமன்றி உள்ளடக்கத்திற்குத் தகுந்த யாப்பு வடிவங்களை கையாளுவது முடியரசனாரின் யாப்பியல் கொள்கையாக விளங்குகிறது.

சான்றெண் விளக்கம்
1.அ.கி.பரந்தாமனார், கவிஞராக, ப.191.
2.ந.வீ.செயராமன், யாப்பியல் திறனாய்வு, ப.101.
3.சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற்பாகம் –
முதற்பகுதி ப.469.
4.அ.கி.பரந்தாமனார், கவிஞராக, ப.214.
மேலது., பக்.224 -225.
5.யாப்பருங்கலக் காரிகை, 298.
அ.கி.பரந்தாமனார், கவிஞராக ப.239.
மேலது., ப.263.
6.யாப்பருங்கலக்காரிகை, 301.
அ.கி.பரந்தாமனார் பக்.224-225.
7.சிற்பி பாலசுப்பிரமணியம், கவிச்செம்மல் கவிதைக் கலை, ப.48.
8.கவிஞர் கண்மணிசுப்பு அவர்கள் முடியரசனார் நூற்றாண்டு விழாக்
கவியரங்கில் உரைத்தது, நாள்.02.08.2020.
9.முனைவர்.பெ.சுயம்பு, தமிழ் இலக்கிய அறிமுகம், ப.154.
10.பேரா.ந.சுப்பு ரெட்டியார், இலக்கிய வகையின்
வளர்ச்சியும், இக்கால இலக்கியங்களும்,ப.80.

துணைநூற்பட்டியல்

பாரி முடியரசன் (பதி.,) கவியரசர் முடியரசன் கவிதைகள் (முழுத்
தொகுப்பு), மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108, 2016.

உ.வே. சாமிநாததையர் (உ.ஆ) யாப்பருங்கலத் காரிகை மூலமும் உரையும், உ.வே.சா நூல்நிலையம், சென்னை, 1968.

சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற்பாகம் மற்றும் இரண்டாம் பாகம், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியிடு: 105, 1989.

ந.வீ.செயராமன், யாப்பியல் திறனாய்வு, மணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம் – 608 001, 1977.

அ.கி. பரந்தாமனார், கவிஞராக.., பாரிநிலையம், சென்னை – 108, 1984.

பேரா.ந.சுப்பு ரெட்டியார், இலக்கிய வகையின் வளர்ச்சியும், இக்கால
இலக்கியங்களும், ஐந்திணை பதிப்பகம், சென்னை – 5, 1997.

டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதைக் கலை, மெய்யம்மை பதிப்பகம், காரைக்குடி – 1, சென்னை – 14, 2001.

பெ. சுயம்பு, தமிழிலக்கிய அறிமுகம், இலக்குமி நிலையம், சென்னை, 2005.

ய.மணிகண்டன், தமிழில் யாப்பிலக்கணம் வரலாறும் வளர்ச்சியும், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001, 2017.

Leave a Comment

Your email address will not be published.