சென்னிமலை தண்டபாணி
வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அக்டோபர் 2019 “இனிய உதயம்” இலக்கிய இதழ் வெளியிட்ட கட்டுரை
‘சுற்றிவ ளைத்திடும் எத்துய ரத்தையும்
சுட்டுமு டித்ததை – எறிவேனே
சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும்
சொற்றமி ழுக்கெனைத் – தருவேனே”
என்ற சூளுரையோடு, தன்மானம் குன்றாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனாரின் நூற்றாண்டு விழா 7.10.2019 அன்று காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. 7.10.1920ல் பெரியகுளத்தில் பிறந்த இந்தப் பாட்டுப்பறவை 78 ஆண்டுகள் ஒரு திங்கள் இருபத்து எட்டு நாள்கள் வாழ்ந்து, புரட்சிக்கவிஞரின் தோட்டத்துப் பறவையாய் ஓயாமல் கூவிக் கொண்டே இருந்தது. தன்னலத்தில் வீழாமல் தமிழ்நலத்தையே நாடி, தமிழர்களின் நரம்புகளில் திராவிட இயக்கக் கருத்துகளை முறுக்கேற்றிக் கொண்டேயிருந்தது. “சாகித்ய அகாதமிகளையும் ஞானபீடங்களையும் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தன் கொள்கை இலக்கை நோக்கியே அவர் குறியாயிருந்தார்” என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். உண்மைதான். நேரத்திற்கு ஏற்ப நிறம்மாறிக் கொள்கிறவர்கள் கோலோச்சுவதும், கொண்டாடப்படுவதுமாக இருக்கிற காலகட்டத்தில் முடியரசனாரைப் போல எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
“இந்தியாவில் இப்போது பேசப்படும் மொழிகளில் மிக முந்திய காலத்திலேயே தமிழ் வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்துவிட்டது. அது சமஸ்கிருதத்தின் செல்வாக்கின்றி வளர்ந்தது. அதைப் பேசுவோர் மிக முன்னரே உயர்நிலைப் பண்பாட்டை அடைந்தனர். எனவே தமிழர்களின் சொந்தச் சொற்களை ஆராய்வதால் குறிப்பாக தமிழர்களின்—பொதுவாக இந்தியர்களின் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வாழ்க்கையைப் பற்றிய ஒரு படத்தைக் கட்டமைக்க முடியும்”
என்றார் வரலாற்றுப் பேராசிரியர் பி.டி. சீநிவாச ஐயங்கார் (இந்திய்ப் பண்பாட்டு வரலாறு பக் 62). ஆனால் திரும்பத் திரும்பச் சிலர் திட்டமிட்டுத் தமிழின் தொன்மையை, பெருமிதத்தை இருட்டடிப்புச் செய்து கொண்டிருக்கிற இழிநிலைதான் இன்றளவும் காணப்படுகிறது. திராவிட இயக்கம் எப்படிக் கருக்கொண்டு, உருக்கொண்டது என்கிற வரலாற்றுப் பார்வையை, வடிகட்டிய வஞ்சத்தோடு மறைத்துக்கொண்டு, ஆதிக்கச் சக்திகள் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு எடுக்கிற ஆயுதங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்குப் பல்லக்குத் தூக்குகிற அள்ளக் கைகள் வரலாற்றின் கரும்புள்ளிகள் தான். சமுதாயத்தில் பெரும்புள்ளிகளாக ஆவதற்காக இந்தக் கரும்புளளிகள் செய்கிற செயல்கள் தமிழ்ச்சமூகத்தின் அடுத்த தலைமுறையை எங்கே கொண்டுபோய் எரித்துச் சாம்பலாக்குமோ என்று நம்மைத் துடிதுடிக்க வைக்கிறது. ஆனால் முடியரசனார் ஒவ்வொரு நொடியிலும் தமிழின், தமிழனின் நலம்நாடிப் பாடியவர்.
“நாயும் ஒப்பாத அடிமை வாழ்வை
நாலு கோடித் தமிழரா ஒப்புவர்?
தாய்நாட்டிற்குத் தமிழ்நா டென்றுபேர்
தமிழர்க்கே மறவர் என்றுபேர்”
என்று கொதித்தார் புரட்சிக்கவிஞர். இந்தச் சிந்தனையிலிருந்து கிளைத்தெழுந்த கவியரசர் “பொய்த்த வாய்மொழி போதும்“ என்ற கவிதையில்- 9.3.1987ல்
“ஏழு மாநிலம் ஆளவோ?- பதி
னேழு மாநிலம் தாழவோ?
பாழும் அந்நிலை காணவோ?- யாம்
பாரி லேபழி பூணவோ?
பெற்ற விடுதலை பொய்க்கவோ?-அப்
பேறு நீங்களே துய்க்கவோ?
மற்றவர்க்கது கைக்குமோ?-இம்
மாநிலம் யாவும்நும் கைக்குளோ? (முடியரசன் கவிதைகள் பக் 372)
என்றார். அன்றைய காலகட்டத்தில் இந்தி பேசுகிற மாநிலங்கள் ஏழுதான். மீதமிருந்த பதினேழு மாநிலங்களும் வெவ்வேறு மொழிபேசுபவையாக இருந்தன. ஆக, இந்தி பேசுகிற மக்கள் மட்டும்தான் வாழ வேண்டுமென்றால், பெற்ற விடுதலையால் என்ன பயன்? அது என்ன நீதி? என்று கேட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது எப்படி என்பதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதேபோல் சமஸ்தானங்கள் எப்படி ஒன்றிணைக்கப்பட்டு இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது என்பதும் நெடிய வரலாறு. இந்த வரலாறுகளையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, அதிகாரங்களையெல்லாம் ஒற்றை மையப் புள்ளியில் குவிக்க நினைப்பது ஏலாது என்பதை எண்ணிப் பார்த்த கவிஞர்.
“விரலைந்தும் தனித்தனியே இயங்கி நிற்கும்
வேலேந்தும் பொழுதிலனை இணைந்து நிற்கும்
தரமறந்த உரிமையுடன் மாநிலங்கள்
தனித்தனியே இயங்கிவரும்.. பகைவருங்கால்
உறவுணர்ந்து தோள்தந்தே இணைந்து நிற்கும்
ஒற்றுமைஎன் றிதனைத்தான் உரைப்பர் மேலோர்,
ஒருமையெனும் பெயராலே விரல்கள் ஐந்தை
ஊசியினால் தைப்பதற்கு முனைவா ருண்டோ (மு.க. பக் 367)
என்றார். ஆம், நாட்டின் ஒற்றுமை என்ற பெயரில் மாநில உரிமைகளைப் பறிப்பதும் உணர்வுகளை மிதிப்பதும் ஏற்க முடியாது என்பதையும் உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல்கொடுப்போம் என்பதையும் இன்னும் ஒருபடி மேலே போய்
‘தத்தமது நாகரிகம் மொழிகள் பண்பு
தனித்தன்மை எள்ளளவும் கெடுத லின்றி
ஒத்துரிமை உணர்வுடனே மாநிலங்கள்
உளமொன்றி வாழ்வதுதான் நமது வேட்கை” (மு.க. பக் 367)
என்றார். இங்கே பல்வேறு பண்பாடுகள் இருக்கின்றன. பல்வேறு மொழிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒற்றைக் கூட்டுக்குள் அடக்கநினைப்பது கடும் எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். இதை
“இந்தியத்தில் ஒருமொழிக்கே ஏற்றமெனில்
இரண்டுபடும் இந்த நாடு
விந்தியத்தின் வடபுலமே விடுதலையின்
பயன்பெறுமேல் விரைந்து தெற்கு
முந்தியெழுந் தார்ப்பரிக்க முயலாதோ
உரிமைபெற? அடிமை என்றால்
வந்தெதிர்த்து விடுதலைக்கு வழிவகுக்கும்
நாளைவரும் வயவர் கூட்டம் (மு.க. பக் 372-
(வயவர் என்றால் வீரர் என்று பொருள்). என்றார்.. எவ்வளவு தீர்க்கமான சிந்தனை. வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. .
‘நாட்டில் ஒற்றுமை நாடுகிறோம்- அதை
நாளும் நினைந்திங்கு பாடுகிறோம்
நாட்டைப் பிளந்திட நாடுகிறாய்- அது
நன்மை எனத்திட்டம் போடுகிறாய்.” (மு.க. – தாய்மொழிகாப்போம் .பக் 370)
என்று போலி வாக்குறுதிகளாலும், பொய்ப் பரப்புரைகளாலும் தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற எண்ணுகிறவர்களைக் குறிவைத்துப் பாடியிருக்கிறார் போலும்..
தமிழ், தமிழன் என்கிற உணர்வு கவிஞருக்குள் எப்போதும் கொப்பளித்துக் கொண்டே இருந்திருக்கிறது. அதற்கு இடையூறு வருமென்றால் கொந்தளித்திருக்கிறது. கொதித்துக் குமுறியிருக்கிறது. இதோ 28.9.1958 தமிழ் வாழ்வு என்ற தலைப்பில் மதுரை எழுத்தாளர் மன்றக் கவியரங்கில்
‘இந்நாட்டைத் திராவிடநா டென்றுஞ் சொல்வர்
இயல்புடைய நல்லறிஞர்.. இந்த நாட்டில்
முன்கூட்டி மூத்தகுடி தமிழர் என்போர்
நாகரிக முதிர்ச்சியினில் வாழ்ந்த நல்லோர்
இன்பூட்டும் தமிழ்வாழ்வைப் பாடுங் காலை
இதயத்தால் பூரித்தேன்.. ஆனால் இன்று
பின்பாட்டுப் பாடுகின்ற தமிழன் வாழ்வைப்
பேசுதற்கும் நாணுகின்றேன்.. கூசு கின்றேன். (மு.க பக் 149)
என்று பாடிய கவிஞர் 21.2.1960ல் தஞ்சை சரபோசி மன்னர் கல்லூரியில் வாழையடி வாழை- பாரதியார் என்ற தலைப்பில் பாடிய கவிதையில் தன் மனஉணர்வைக் கொட்டினார்.
“என்னாடு தமிழ்நாடென் றியம்பக் கேட்டால்
என்செவியில் தேன்பாயும் என்று கூறின்
பன்னாடை மதியுடையார் வெறுப்புணர்ச்சி
பகையுணர்ச்சி என்றெல்லாம் பகட்டு கின்றார்.
தென்னாடென் றுரைத்தாலோ ஒன்று பட்ட
தேயத்தைப் பிரிக்கின்ற உணர்ச்சி யென்பார்.
எந்நாளும் தமிழரெனும் உணர்ச்சி யின்றி
இருப்பவரே பாரதத்தின் புதல்வர் என்பர். (மு.க. பக் 165 )
ஆக, தமிழ்,தமிழன் தமிழ்நாடு, தமிழின் பெருமிதம் என்றாலே சிலருக்குத் தனலில் விழுந்தது போலிருப்பது நமக்குப் புரிகிறது. அதற்கும் சிலர் பின்பாட்டுப் பாடுவதைப் பார்த்து மனம்புண்பட்டுச் சொல்கிறார்.
‘எப்படியோ அரசிருக்கை கிடைத்து விட்டால்
எடுபிடிகள் ஆளம்பும் அமைந்து விட்டால்
அப்படியே ஒட்டிக்கொண் டகல மாட்டார்
அடுக்கடுக்காய்ப் பழிவரினும் இறங்க மாட்டார். (மு. க. பக் 366)
இந்த நிலை இன்று மட்டும் காண்கிற காட்சி அன்று. தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வருகிற காட்சி இது.
நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத் இருந்த காலகட்டம். 27 ஏப்ரல் 1960 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து ஓர் அறிவிப்பு. அதன் சாரம் இதுதான். “இந்தி மொழி ஆட்சி மொழியாக வந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்”. இது கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. “அகில இந்தியத் தேசிய மொழியாகவும், அகில இந்தியப் பொதுமொழியாகவும்,அகில இந்திய ஆட்சி மொழியாகவும் இந்தி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தியது முதலே தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக்குரல் கிளம்பியது. ஏனெனில் தேசியம் என்பது தானாக இயற்கையில் வளரும் மொழி, பண்பாடு,நாகரிகம் ஆகியவற்றின் ஒரு தொகுப்பே தவிர, திடீரென்று ஏற்படுத்திக் காட்டும் ஒரு பொருளல்ல. இந்தியா என்பது ஒரே தேசிய மொழியைக் கொண்ட ஒற்றை நாடு அல்ல. பல்வேறு தேசிய மொழிகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டம். இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய மொழிகளில் இந்தியும் ஒரு தேசிய மொழி. இந்தி மட்டுமே தேசிய மொழி கிடையாது. இந்தி பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள். மேலும் இந்தி மொழியைப் பேசுவதாகக் குறிப்பிடப்படும் பத்தரைக்கோடி மக்களும் ஒரே வகையான இந்தியைப் பேசவில்லை. பந்தேலி, கனோஜ், பங்காரு,கடிபோலி,அவதி,பகேலி,சாஸ்டிஸ்கரி,மைதிலி,போஜபூரி,மகதி,பிஜ்பாஷா என்ற பதினொரு வகைப்படும் இந்திகளைத்தான் பேசுகிறார்கள். இவற்றில் இந்திய அரசால் திணிக்கப்படும் இந்தி, வெறும் இரண்டுகோடிப் பேர் மட்டுமே பேசக்கூடிய கடிபோலி இந்தி” (திராவிட இயக்க வரலாறு- – பாகம் 1- பக்271-272 ஆர். முத்துக்குமார்) என்கிற ஆய்வாளரின் கருத்தும் கவனத்துக்கு வருகிறது. அப்படியே “சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கான முன்னோட்டமே இந்தித் திணிப்பு. ஏனென்றால் இந்தி, பேச்சுச் சமஸ்கிருதம் என்றே கருதப்படுகிறது” என்ற நாவலர் சோமசுந்தர பாரதியாரின் கருத்தும் நினைவுக்கு வருகிறது. இந்த நிலைப்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமலா இருப்பார் கவிஞர்? தன் பார்வையை 7.5.1987ல் எழுதிய “தமிழனா.. இந்தியனா ?“ ( மு.க. பக் 352) என்கிற கவிதையில் முன்வைத்தார்.
“இந்தியன் என்றொரு தமிழ்மகன் சொன்னால்
அவன்தான் இங்கே ஏமாளி—கூத்தன்
இயக்கிட இயங்கும் கோமாளி
உந்திய உணர்வால் தமிழனென் றேதனை
உரைப்போன் மானம் உயர்ந்துள திறனாளி
அவனே இந்தியத் தமிழனென் றிசைத்தால்
அடிமையென் றெழுதிய முறியாளி
புவிமிசை தமிழ இந்தியன் என்றே
புகல்பவன் சரிநிகர் சமனாளி..
எப்பெயர் சூடுதல் ஒப்புமென் றாய்ந்தே
ஏற்றிட முனைபவன் பொறுப்பாளி
எப்பொருள் கூறினும் எவ்வெவர் கூறினும்
மெய்ப்பொருள் காண்பவன் அறிவாளி (பக் 352)
மிகநுட்பமாக எழுதப்பட்ட கவிதை இது. இந்தித்திணிப்புக்குப் பின்னால் யாருடைய நலன் இருக்கிறது என்பதை எண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் கவிஞர். ஏனென்றால் திராவிட இயக்கப் பாசறையில் தன்னைப் புடம்போட்டுக் கொண்டவரல்லவா? “என் குறிக்கோள்” என்ற கவிதையில் 1.2.1988ல் பாடினார்
“தமிழன் எனும்பெயர் சாற்றுங் காலை
குமையா உரிமை கொள்ளுவேன் யானே
இந்தியன் எனும்சொல் இயம்புங் காலை
உந்திய நட்பை உணருவேன் யானே
உலகன் எனும்பெயர் ஓதுங் காலைக்
கலகமில் லன்பைக் காணுவேன் யானே
விரிமனம் எனச்சொலி உரிமை யிழந்து
பிறபிற நினையிற் பேதையன் யானே” (மு.க. பக் 353)
பரந்தமனம் படைத்தவர்கள் நாங்கள் என்று சொல்லிச் சொல்லி, இளிச்சவாயனாகிவிடாதே தமிழா என்று சொல்லாமல் சொல்கிறார்.
கவிஞரின் மொழியுணர்ச்சி எப்படி இருந்தது? பிற மொழிகளை வெறுத்து ஒதுக்கச் சொன்னாரா? அதுதான் இல்லை. தமிழையே அறியாத தற்குறியாக இருந்து என்ன பயன் என்பதைத்தான் கேட்கிறார்
”பிறமொழியை வெறுக்கின்றேன் என்று சொல்லிப்
பிழையாகக் கருதாதீர்.. தமிழை யிங்கு
மறுவறநன் குணர்ந்ததற்பின் பயில்க என்பேன்..
மனைவியைமற் றொருவன்பால் அடகு வைத்துத்
துறவறமேற் கொளலாமோ? தாய்த வித்துத்
துடித்திருக்க அறஞ்செய்ய முனைதல் நன்றோ?
கறவையிடம் பால்கறந்து கன்றிக் கின்றிக்
கதறிவிழக் கடவுளென்று சிந்தல் நன்றோ?“ ( மு.க. பக் 82-மொழியுணர்ச்சி –)
கவிஞரின் நினைவில் எப்போது நின்று கொண்டிருந்தது தமிழின் நலம், தமிழரின் நலம். சாதி, சமயங்களுக்குள் விழுந்து மொழியுணர்வையும் இனஉணர்வையும் இழந்துவிடக் கூடாதே தமிழன் என்கிற எண்ணம் அவருக்குள் தகித்துக் கொண்டேயிருந்தது.
தமிழால் வளர்ந்து, வாழ்ந்து உச்சத்தில் போய் உட்கார்ந்தபின் அதன் வேரில் வெந்நீரை ஊற்றுகிற எத்தர்களையும் கவிஞர் எடைபோடுகிறார்.
‘உடுக்கின்றார் உண்கின்றார்.. உயர்வுங் கொள்வார்
ஒப்பற்ற தமிழ்மொழியால்.. நன்றி இன்றிக்
கெடுக்கின்றார் அதன்வளர்ச்சி நேரில் சில்லோர்
கேண்மையொடு வளர்க்கின்றோம் என்று சில்லோர்
கொடுக்கின்றார் நஞ்சதனைக் கூசா திந்தக்
கொடுமைகளை நீக்கிடவே ஆவி தானும்
விடுக்கின்றோம் தாய்மொழிக்கே என்று சொல்லி
வீறுற்று நிமிர்ந்தெழுவீர் தமிழ்நாட் டீரே! (பக் 83)
தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் வைக்கிற வேண்டுகோள் இதுதான். ஏமாந்து விடாதே தமிழா என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கவிடுகிறார். சாதி, சமயங்களுக்குள் உன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு மொழியை அழிக்கத் துணியும் முட்டாளாய் இருந்துவிடாதே என்கிறார்.
‘தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா
சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்
தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா
சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும் (மு.க. பக் 377)
என்றும் குமுறுகிறார். எரிச்சலோடு “கோவிலுக்குள் கொடுமை“ (28.3.84ல் எழுதியது) என்று எழுதுகிறார்.
“வடமொழி ஒன்றே ஏற்பர்
வண்டமிழ் ஏலா ரென்றால்
கடவுளர் உருவக் கல்லைக்
கடலிடை வீச லன்றி
இடமுடைக் கோவி லுக்குள்
இன்னுமேன் வைத்தல் வேண்டும்?“
என்றும்
“தூற்றும் மதவெறி சூழின்
ஏற்றம் பெறுமா இந்திய நாடே?(மு.க. பக் 353)
என்றும் கேட்டார்.
கவிஞருக்கு தமிழே தெய்வமாக, தாயாக, தந்தையாக, காதலியாக, மகனாக என்று எல்லாமாக இருக்கிறது. அவருக்கு முன்னவர் வாழ்க்கை எப்படி இருந்தது என்று எடுத்துச் சொல்கிறது. யாருடைய நாடு இது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.“ தமிழே- என் தாய்” என்று
“வாழ வழிவகுத்த –திரு
வள்ளுவன் ராமலிங்கம்
ஆழ நெடும்புலமைக்- கம்பன்
அவ்வை யுடனிங்கே
சோழரில் பாண்டியரில்- கவி
சொன்னவர் சீத்தலையான்
தோழர்கள் என்றிவர்போல்- பலரைத்
தொல்புகழ்த் தாய்கொடுத்தாள். (மு.க. பக்109)
என்று பெருமிதத்தோடு நடந்தார்.
திராவிட இயக்கத்தின் போர்முரசமாக ஒலித்த முடியரசனார் கடவுள் மறுப்பாளராகவே வாழ்ந்தவர். இருந்தும் தமிழ் என்று வருகிற போது
“ஆண்டவன் வெறுத்தாரோ?- தமிழை
அன்பர்கள்தாம் மறுத்தாரோ?
நெஞ்சை உருக்கிடும் திருவா சகநூல்
நினைக்க இனிக்கும் தேவா ரங்கள்
அஞ்சலி செய்திட உதவா என்றால்
அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே” (மு.க.பக் 106)
என்றார்.
மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதே வரலாறு. கவிஞருக்குத் தமிழே எங்கும் நிறைந்திருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் இந்த வாழ்க்கை வாழ்வதைவிடச் சாவதே மேல் என்றார்.
“என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம்
எத்துறையும் தமிழ்மொழியின் ஆட்சி வேண்டும்
இந்நாட்டம் நிறைவேற வில்லை என்றால்
இருந்தென்ன வாழ்ந்தென்ன சாவே மேலாம்“. (மு.க.365)
ஆட்சிகள் மாறினாலும் மேலிருக்கும் காட்சிகள் மாறுவதில்லை. அன்றைய இந்தி எதிர்ப்பின் போது நஞ்சுண்டு மாண்ட விறலிமலை சண்முகனைக் குறித்து ”தமிழோடிணைந்தாய்” என்ற தலைப்பில்
“இனமானம் காத்திடுவோம் எரிநஞ்சும்
எடுத்துண்போம்..என்று கூறி
புனலாடி எழுவதுபோல் அனலோடு
விளையாடிப் புகுந்த இந்திக்
கனலோடு சமராடிக் களங்கண்டு
புகழ்கொண்ட காளை நீவிர்
நனவோடு நனவாக எமதுயிர்ப்பு
மூச்சாக நாளும் வாழ்வீர் ( மு.க. பக் 370)
என்று பாடினார்.. தமிழோடு வாழ்ந்த கவிஞர் காலங்கடந்தும் வாழ்ந்து கொண்டே இருப்பார். திராவிட இயக்கங்களும், தமிழியக்கங்களும், தமிழர்களும் இந்த நூற்றாண்டின் வேளையிலாவது புரட்சிக்கவிஞரின் கவிதைகளோடு முடியரசனாரின் கவிதைகளையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் நரம்புகளில் உரமேற்ற வேறுவழியே இல்லை.
“இருள்சூழ்ந்து மருள்சூழ்ந்து சமுதாயம் இருட்டறையில்
எதுவுண்மை பொய்யென்றே அறியாமல் தூங்குகையில்
இருள்கிழித்து வெளிக்கிளம்பும் ஞாயிறென அறிவொளியை
ஈந்துவந்த ஈவேராப் பெரியாரின் திருநாடு ( மு.க.பக்112)
என்று அவர் பாடிய பாட்டுவரிகள் பொய்த்துவிடக் கூடாதல்லவா?