ஞா.அருள் ஞான வித்யா
‘வீறுகவியரசர் முடியரசனார் படைப்புலகம்’ நூலில் ‘வீறுகவியரசரின் இளம்பெருவழுதி காப்பியத்தில் மொழிக்காப்பு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரை.
முன்னுரை
மதுரைப் பல்கலைக்கழகம் பாடமாக வைப்பதற்கு நாடகக்காப்பியம் ஒன்று இயற்றித் தருமாறு வீறுகவியரசரை வேண்டியதால் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்னும் புறநானூற்றுப் பாடலைப் பாடிய புலவரும் புரவலருமாகிய கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பெயரில் முடியரசனார் நாடகக் காப்பியம் இயற்றினார். அந்நாடகக் காப்பியத்தில் காணலாகும் மொழிக்காப்புணர்வை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இளம்பெருவழுதி
உலகப் புகழுக்குரிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி மன்னனைப் பற்றி 1948-ஆம் ஆண்டு ஒரு சிறுகதையெழுதிப் ‘போர்வாள்’ என்னும் தாளிகையில் வெளியிட்டார் வீறுகவியரசர். அக்கதையையே சில மாற்றங்கள் செய்து இந்நாடகக் காப்பியமாக்கியுள்ளார். பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்கள், இனப்பற்று – மொழிப்பற்று – நாட்டுப்பற்று, போர் மறுப்பு இவையே இந்நாடகக் காப்பியத்தின் உட்கோளாகும். இக்காப்பியத்தினுள் 23 காட்சிகள் அமைந்துள்ளன.
மொழிப்பற்று
தமிழாசான் வெண்டலை நாகனிடம் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைக் கற்கச் சென்ற குழலி ‘கடினமான இலக்கணப் பயிற்சி எமக்கு எதற்கு?’ என்று இலக்கணப்பயிற்சிக்கு அஞ்சி வினவுகிறாள்.
அதற்கு பதிலுரைத்த நாகனார் ‘விழிகளுக்கு இமைகளைப் போலவும், ஆற்றுக்குக் கரைகளைப் போலவும் மொழியைக் காப்பது இலக்கணமாகும். முயலாதிருப்பின் எளிதில் வருமோ? முயலின் வாரா உறுதிகள் உளவோ?’ என்று அச்சம் நீக்குகிறார். அச்சமும் தயக்கமும் நீங்கிய குழலி தாய்மொழி காக்கும் வழிகளைக் கேட்கிறாள்.
“புகுவ தடுத்தல் புதுவ படைத்தல்
தகுமிரு வகைத்தே தாய்மொழி காத்தல்” (காட்சி – 2)
என்று வழியுரைக்கின்றார். ‘புதியன படைத்தலைப் போல புகுவது தடுத்தல் எப்படி தாய்மொழி காக்கும்?’ என்று குழலி வினவுகிறாள்.
“அயன்மொழிக் காட்பட் டம்மொழிச் சொற்கள்
நயந்து கலந்து நடையிற் புகவிடல்
பிறமொழி விழைந்து பெறுமொழி மறந்து
வருமொழிக் காளுமை தருதல் எனுமிவை
புகாஅது காத்தல் புகுவ தடுத்தலாம்;” (காட்சி-2) என்றும்
“தாய்க்குலம் விழித்தெழின் தாயகஞ் செழிக்கும் தாய்மொழி ஆல்போல் தழைக்கும் கொழிக்கும்”
(காட்சி – 2)
என்றும் பிறமொழிச் சொற்களை தமிழ்மொழியில் புகவிடாமல் காத்தலையும், தாய்மொழி தழைத்துக் கொழிக்க தாயகம் செழிக்க பெண்கள் விழித்தெழுந்தால் முடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றார்.
இம்மைக்குரியன இழப்பது நன்றோ?
வஞ்சி நாடனும் காழக மன்னனும் பாண்டிய மன்னன் மீது போர் தொடுக்க விழைவது தெரிந்து அரசவையில் மன்னன் செய்தியைப் பகிர்ந்தார். உடனிருந்த கணியன்
“முக்கட் செல்வன் முதுபெருங் கோவிலும்
தெற்கின் மேய செவ்வேள் குன்றும்
வடபால் மேய மாலிருஞ் சோலையும்
வடமொழி யோதி வழிபடின் நன்றாம்
இடமகல் நம்நா டேற்றமும் எய்துமால்” (காட்சி – 4)
என்று வடமொழியில் கடவுளை வழிபட வழிகூறுகிறார். உடனே அங்கிருந்த நாகனார் ‘தென்மொழி யிசைப்பின் தீங்கு வருங்கொல்?’ என்று சீறுகின்றார். ‘தேவமொழியான வடமொழிக்குத் தேவர் உவப்பர்’ என்று மறுமொழி கூறிய கணியனிடம்
‘ஒரு மொழி தேவன் உவப்ப னாமெனில்
அறிவிற் சிறந்தோர் அச்சொல் ஏலார்;
பிறமொழி வெறுப்பன் இறைவன் என்ப
தறமும் அன்றே; அறிவும் அன்றே’ (காட்சி – 4)
என்று பதிலடி தருகின்றார். அதை ஏற்றுக்கொள்ளாத கணியன் ‘மன்னனின் மறுமைப் பயனுக்காக வடமொழியை ஓதுக என்றுரைத்ததில் பிழையுளதோ?” என்று வினவுகிறார். அதற்கு நாகனார்,
*செந்தமிழ் வளர்க்கும் சீர்சால் வேந்தன்
முந்தையர் சங்கம் மொய்ம்புறக் கண்டு
தாய்மொழி ஆய்ந்தனர் தமிழ்மொழி ஓதினர்
தீய நிரயத்துச் சென்றோ வீழ்ந்தனர்?
இம்மைச் செய்தன மறுமைக் காமென
இம்மைக் குரியன இழப்பது நன்றோ ?
இருப்பது மறுத்தலும் வருவது புகுத்தலும்
வெறுப்புறு செயலாம்; விழைவதும் நன்றோ ? (காட்சி – 4)
என்று கணியனின் மூடத்தனத்தைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் மொழிக் காப்பாளராய் நாகனார் உருவில் நமக்கு வீறுகவியரசர் முடியரசனாரே புலப்படுகின்றார்.
தமிழே இனிமை
போர் மறுப்பைப் பொருண்மையாகக் கொண்ட காப்பியமாய் ‘இளம்பெருவழுதி’ நாடகக் காப்பியம் இருந்தாலும் அதில் இயன்ற போதெல்லாம் தாய்மொழிக்குப் புகழ்பாடுகிறார் முடியரசனார்.
‘தாய்ப்பா லருந்தத் தயங்குமோ குழவி
தமிழே இனிமை’ (காட்சி – 2)
‘தாயக மண்ணுந் தாயும் ஒன்றே
தாய்க்கோ தீமை தன்மகன் நினைவன்?” (காட்சி – 17)
‘மோனை யெதுகை முதலியன இழந்த
புன்மொழிப் பாட்டெனப் பொலிவில னாகி’ (காட்சி – 18)
போன்ற இடங்களில் மொழியின் இனிமையையும், தாய் நாட்டின் பெருமையையும், மரபு மாறாமல் பா யாக்கவேண்டியதன் அருமையையும் எடுத்துரைக்கின்றார்.
முடிவுரை
வீறுகவியரசர் முடியரசனார் இளம்பெருவழுதி நாடகக் காப்பியத்தில் உரைப்பது போன்று தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழர்கள் புகுவ தடுத்தலையும் புதுவ படைத்தலையும் தலைக்கடனாகப் பேணி வாழ்ந்தால் தண்டமிழ் மொழி தழைத்தினிது ஓங்குமென்பது உறுதி.