வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி:

தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார்.

தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை மாற வேண்டிக் கவிவாளாம் படைக்கலன் ஏந்தி வீறுகொண்டு பாடினார். அவ்வகையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்தனிக் கவியாக வீறுகவியரசர் விளங்குகிறார்.

முத்தமிழின் மீட்சிக்காகவும் ஆட்சிக்காகவுமே முடியரச முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்தது; காற்றில் கலந்திருந்து அவ்வோசை இன்னமும் நம் நெஞ்சில் ஊற்றெடுத்துப் பெருகுகிறது.

தமிழின் சீர்மையைப் பாடியது மட்டுமன்று நம் பாவரசர் செய்த அரும்பணி. கற்பித்தலின் வழியாகத் தாய்மொழி அறிவையும் உணர்வையும் பரப்புவதைத் தன் வாணாள் தொண்டாகக் கொண்டிருந்தார் அவர்.

முடியரசரின் அடியொற்றித் தமிழ் பரப்புவதை எஞ்ஞான்றும் தன் தலைத்தொண்டாக் கொண்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், அந்நோக்கில் ‘வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில்’ என்னும் செயற்றிட்டத்தை இஞ்ஞான்று அறிவிக்கிறது. 

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் சொல்லும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

இமய முடியை அடைய முனையும் செலவுக்கு, இலக்கை நோக்கி ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் சிற்றடிகளே இன்றியமையாதவை.

அவ்வகையில் முதற்கட்டமாக – அவ்விலக்கை நோக்கிய சிற்றடியாக – கீழ்க்காணும் பணிகளை முன்னெடுப்பதென்று அண்மையில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள ஆட்சிக்குழுக் கூட்டத்தின்போது முடிவுசெய்யப்பட்டது:

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

தனித்திறன் கொண்ட தமிழாளர்களை – குறிப்பாக இளையோரை – இனங்காண்பதும் ஊக்குவிப்பதும் இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இச்செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன:

  1. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய பேச்சுப்போட்டியொன்றை வலையொளி வழியாக நடத்துதல்; பத்து வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். அவர்கள் அடங்கலாக, இதன்போது இனங்காணப்படும் திறனாளர்கள் அவைக்களத்தின் தொடர் செயற்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பினை நல்குதல்.
  2. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய கட்டுரைப் போட்டியொன்றை நடத்துதல். வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். இனங்காணப்படும் இளந்திறனாளர்கள் தமிழ் ஆய்வு, இதழியல், நூற்பதிப்பு முதலான துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  3. வீறுகவியரசர் முடியரசனார் நினவாகக் கவிதைப்போட்டியொன்றை நடத்துதல். ஆற்றல் கொண்ட கவிகளை இனங்காணல்.
  4. முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகத் தமிழாய்வைத் தேரும் மாணவர்களில் தகையிற் சிறந்தோரைத் தெரிவு செய்து அவர்களுக்கான புலமைப் பரிசிலாக ஓராண்டு காலம் ஊக்கத்தொகை வழங்குதல்; வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் சார்ந்த ஆய்வுகளின்பால் அவர்களை ஆற்றுப்படுத்துதல்.
  5. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளையும் கடந்து வந்த பாதையையும் எடுத்துச் சொல்லும் ஆவணப்படங்களை உருவாக்குதல். அதற்கான போட்டியொன்றை நடத்துதல்.

வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் – பொருண்மை வகைத் தொகுப்பு

பெருநூல் வெளியீடு

வீறுகவியரசர் கவிதைகளைப் கருப்பொருள் சார்ந்து  பகுத்து, பதினொரு தலைப்புகளின் கீழ் தொகுத்துப் பெரு நூலாகக் கொண்டு வருவதற்கான பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.  

தமிழ் ஆய்வாளர்கட்கும், அறிஞர்கட்கும், ஆர்வலர்கட்கும் மிகுபயன் தரத்தக்க வகையில் இப்பொருண்மை வகைத்தொகுப்பு உருப்பெற்றுள்ளது.

பக்கங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி நீண்டுள்ளதன் காரணமாக அதன் அச்சாக்கம் பெரும் பொருட்செலவைக் கோரி நிற்கிறது. அச்சுமையைப் பொறுப்பேற்கத் தமிழ்ப்பற்று மிகுந்த புரவலர்கள் முன்வந்தால் நூல் அச்சேறி விடும்.

தமிழ்கூறு நல்லுலகுக்கான செய்தி

மேலுள்ளவை தனியொரு சிலரால் செய்து முடிக்க இயன்ற பணிகள் அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். எண்ணம் பெரியது. காலத் தாழ்வில்லாமல் இவற்றை ஈடேற்றுவதற்கு உங்களில் ஒவ்வொருவரும் இயன்ற வழிகளில் கரங்கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். இப்பணிகளுக்குத் தொண்டுளம் கொண்டு உதவ விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்க.

தொடர்பு:

+91 98425 89571 (முனைவர் தமிழ் முடியரசன், தமிழகம்)

+44 74286 31805 (கவி. மதுரன் தமிழவேள்)