எம் ஜி ஆர் வழங்க முன்வந்த பதவியை ஏற்க மறுத்த வீறுகவியரசர் – புலவர் புலமைப்பித்தன்

(முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவரும், திரைப்படப் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் அவர்களது நினைவுப் பகிர்வு)

மாபெரும் கவியரசர் முடியரசன் மிகப்பெரும் படைப்பாற்றால் மிக்க பெரும் கவிஞர். கவிதை உலகின் முடியரசன். எனக்கு மட்டுமல்ல; பெருங்கவிஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கியவர். அவரின் கவிதைகளும் காப்பியங்களும் பெரிய விலை மதிப்பற்ற சங்க காலத்திலே எழுதப்பட்டவை போன்றவை.

      தமிழாட்சி மலரவும், தமிழர் தன்மானமும் தன்னெழுச்சியும் சமத்துவமும் பொதுமையும் பெற்று வாழவும், இதற்காகத் திராவிட இயக்கம் ஆட்சி பீடம் ஏறவும் கவிதைகள் படைத்தவர் வீறுகவியரசர் முடியரசனார். அதனால்தான் அவரைப் பேரறிஞர் அண்ணா “திராவிட நாட்டு வானம்பாடி என்று பாராட்டினார். தந்தை பெரியார் “பகுத்தறிவுக் கவிஞர்” என்றும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், “தலைவணங்கா முடியரசர்” என்றும் பாராட்டினர்.

மக்கள் திலகம் எம் ஜி ஆர், வீறுகவியரசர் முடியரசன்

      என் இளமைக் காலத்தில் அக்கால இதழ்களில் வெளிவந்த முடியரசனாரின் கவிதைகளைப் படித்து ஒருவகையில் கவியாசிரியராக அவரைக் கொண்டவன் நான். அவர் கவிதைகள் மொழிப்பற்றை விதைத்தன. அவர் எனக்கு மூத்த அண்ணனைப் போன்றவர். நான் அவரை மிகவும் போற்றுகிறவன். நான் யாருடைய தலைமையிலும் கவியரங்கு ஏறாதவன். ஆனால் முடியரசனார் தலைமையை மட்டுமே ஏற்று கவிதை பாடியிருக்கிறேன். நான் எழுதிய ‘பாவேந்தர் பிள்ளைத் தமிழ்’ கவிதை நூலை அவரிடம் தந்து வாழ்த்துப் பெற்றேன். அந்நூலைப் படித்துப் பார்த்த அவர் என்னை உச்சி மோந்து பாராட்டினார். என் திரைப்படப் பாடல்களும் தரமாக உள்ளதாகப் பாராட்டுவார்.

      ‘கண்ணாடி மாளிகை’ என்ற திரைப்படத்துக்கு பாடல்கள், உரையாடல்கள் எழுதிய முடியரசனார். பின்னர் திரைப்படத்துறையை வெறுத்தொதுக்கிச் சென்றுவிட்டார். அவர் திரைப்படத் துறையைச் சகித்துக் கொண்டு இருந்திருந்தால் அந்தக் காலகாட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அவரது பாடல்களே ஒலித்திருக்கும்.

      புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றவுடன் பேரறிஞர் அண்ணா விழாவினை அரசு சார்பில் கொண்டாட ஆணையிட்டார். கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு யார் யாரை அழைக்கலாம் என்று முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், நான் உட்பட விழாக்குழுவினர் கலந்தாலோசித்த பொழுது கவியரங்கத் தலைமை ஏற்பதற்கு முற்றிலும் தகுதியானவர் கவியரசு முடியரசன் என்று ஒருமனதாகத் தீர்மானித்தோம். அதனை முன்மொழிந்தவன் நான். ஏனெனில் அவர்தான் அன்றைய கவிஞர்களுக்குத் தலைமைக் கவிஞராகவும், வழிகாட்டியுமாகத் திகழ்ந்தவர்.

      கவியரங்கத் தலைமை ஏற்கும்படி கவியரசு முடியரசனாருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அவரோ, தன்னால் இயலாது எனப் பதில் எழுதி விட்டார். அதன்பின் மிகவும் வேண்டி நான் கடிதம் எழுதியபின் ஒப்புதல் தந்தார். 15.9.1977 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் அண்ணா விழா நடைபெற்றது. கவியரங்கில் முடியரசனார் தலைமையில் நான், பின்னாளில் அரசவைக்கவிஞராக இருந்த முத்துலிங்கம், தி.மு.க,ஆட்சியில் அமைச்சராக இருந்த வேழவேந்தன், நா.காமராசன் உட்படப் புகழ் பெற்ற பல கவிஞர்கள் கவிதை பாடினோம். அன்று என் கவிதையை மிகவும் பாராட்டி “இதுதான் கவிதை” என்றும், அண்ணாவைப் பற்றி உருக்கமான என் கவிதையைக் கேட்டு அழுது விட்டதாகவும் தன் முடிப்புரையில் கூறினார். இதைக்காட்டிலும் எனக்கு விருது, பட்டம்  என்று வேறெதுவும் எனக்குத் தேவையில்லை.

      முக்கியமானதொரு செய்தியை இங்கு பதிவு செய்ய வேண்டும். அரசவைக் கவிஞராக முடியரசனாரை நியமிக்கலாம் என்றும் முதலைமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்திருந்த நிலையில், தனக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கப்படவிருப்பதை இந்நிகழ்ச்சியின் பொழுது அறிந்த முடியரசனார், “வரவு நாடி நான் இங்கு வரவில்லை; உறவு நாடித்தான் வந்தேன்” என்று அன்று பாடிய தன் கவிதை மூலமாக தனக்கு அப்பதவி வேண்டாமென்று மறுத்து விட்டுச் சென்று விட்டார். என் அண்ணன் முடியரசனாரை அரசவைக்கவிஞாராக அழகு பார்க்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் அப்பதவி ஓர் ஒப்பந்ததிற்குப் பிறகு கவிஞர் கண்ணதாசனுக்கு வழங்கப் பட்டது.

      இன்னொரு செய்தி. அவருக்கு அரசு வழங்கவிருந்த பாரதிதாசன் விருதினையும் ஏற்க மறுத்து, தனக்குப் பதிலாக அவரின் நண்பர் மறைந்த கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கும்படி கடிதம் எழுதிவிட்டார். பின்னர் அவ்வாண்டு (ஆண்டு நினைவில்லை) பாரதிதாசன் விருது வாணிதாசனுக்கு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள வாணிதாசன் குடும்பத்தாருக்கு உதவியாக இருக்குமாறு ‘முரசொலி’ இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் மகன் பாரியை அனுப்பி வைத்திருந்தார். அக்காலகட்டத்தில் அன்புத் தம்பி பாரி என்னை அடிக்கடி சந்திக்கும் வழக்கமுடையவர். எழும்பூர் கோகுலம் ஓட்டலில் வாணிதாசன் குடும்பத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தம்பி பாரியிடம் கூறினேன். அவர்தான் அவர்களை விழா மேடைக்கு அழைத்து வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவ்விருதினை வழங்கினார்.

      இந்நிகழ்ச்சிகளையெல்லாம் நான் இங்கு குறிப்பிடக் காரணம் வீறுகவியரசு முடியரசனார் எக்காலத்திலும் பதவிகளையோ, பட்டங்களையோ, பணத்தையோ விரும்பாதவர் என்பதையும், திராவிட இயக்க ஆட்சிகளில் கூட எவ்விதப் பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்காதவர் என்பதையும்  தமிழ் – தமிழர் – தமிழ்நாடு உயர்த்தல், திராவிட இயக்கக் கொள்கைகள் பரப்பல், சாதி ஒழித்தல், சமூகநீதி நாட்டல் போன்ற கொள்கைகட்காகத்தான் தன் கவிதை வாழ்வை அர்ப்பணித்தவர் என்பதையும் எடுத்துக் காட்டவுமே.

      மாபெரும் கவிஞர் முடியரசன் அவர்களை நான் எந்நாளும் மறவேன். அவர் என்னுடைய இதயத்திலே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் புகழ் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நிலைத்திருக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published.