வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) காரைக்குடி அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்தம் குரல்வழி வீறுகவியரசரது பா முழக்கம் ஓங்கி ஒலித்தது.
இன்றைய போட்டிகள் தொடர்பாக வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிக்கை வருமாறு:
வீறுகவி முடியரசர் கவிபாடி முத்தமிழுக்கு முடி சூட்டுவோம்!
வீரத்தமிழ் மூவேந்தர் செந்தமிழ் ஆட்சி நிலை நாட்டுவோம்!!
வீண்சாதி மதமற்ற சமத்துவத் தமிழ்நாடு மீட்டுக் காட்டுவோம்!!!
அன்புடையீர், வணக்கம்.
தமிழ் வாழ்வே தம் வாழ்வாய் வாழ்ந்து, தமிழ்த் தாய்க்குப் பாமாலை பல சூட்டித் தம் கவிதைகளைக் கைவாளாய்க் கொண்டு முத்தமிழுக்கு முடிசூட்டப் போராடி, மூவேந்தர் நிலம் மீட்க, தமிழுலகெங்கும் தாய்மொழி ஆட்சி திகழ, செந்தமிழர் கோலோச்ச, சாதி சமயமற்ற அறிவார்ந்த சமத்துவச் சமுதாயம் அமைக்க – வீறுகவி பாடி, பாடிய படியே தம் இறுதி மூச்சு வரை கொள்கைக் குன்றமாக – தன்மானத் தங்கமாக – தலைதாழாச் சிங்கமாக – கவிஞர்க்கும் கவிஞராக – கவியுலக முடியரசராக – வீறுகவியரசராக வாழ்ந்த முடியரசனார் பெயரில் அமைந்த இவ் அவைக்களம் ஆண்டு தோறும் மாணவர்களிடையே முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி ‘வீறுகவியரசர் முடியரசன் பரிசு’ கள் வழங்கித் தமிழ்மொழி, இன, நாட்டுப் பற்றை ஊட்டி வருகிறது.
அவ்வழி அப்போட்டிகள் இவ்வாண்டு 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 09:00 மணிக்கு, காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், மாணாக்கர்களை ஆக்கமும் ஊக்கமும் தந்து – இப்போட்டிக்கு அனுப்பி வைத்து எம் தமிழ்த் தொண்டுக்குத் துணை புரிய விழைகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
பேரா.முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை (தலைவர்) – 99443 60725
முனைவர் தமிழ் முடியரசன் (செயலர்) – 98425 89571
முனைவர் இரா.வனிதா (இணைச்செயலர்) – 94860 02268
திரு.நா.கௌதமன் (துணைச்செயலர்)- 63796 70194