முடியரசனார் தூண்டுதலால் தந்தை பெரியார் ‘கடவுள் வாழ்த்து’ உரைத்த கதை
– கம்பனடிசூடி பழ.பழனியப்பன்
என்னை வழிநடத்திய அறிஞர் பெருமக்களுள் மு.வ அவர்களுக்கு அடுத்தவராய் நான் மதிப்பது வீறுகவியரசர் முடியரசனார் அவர்களைத்தான்.. நான் காரைக்குடி மீ.சு.வி பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தபோது முடியரசனாரிடம்தான் தமிழ் பயின்றேன்.அப்போது என்னைப் பெரியார் வழியில் வழிநடத்தியவர் அவர்.ஓய்வுநேரங்களில் ஆசிரியர் ஓய்வறையில் அவரோடும் ஆசிரியர் தமிழண்ணலோடும் விவாதிப்பதற்குரிய உரிமையைக் கொடுத்திருந்தார்.
கம்பனடிப்பொடியாரிடம் நான் அடிமையாவதற்கு முன்பே எனக்கு கம்பராமாயணத்தில் ஈடுபாடு உண்டாக்கியவர் அவர்தான். ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ பாடலில் ‘தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே’ என்னும் பாடலடியில் தலைவர் என்னும் சொல்லால் கம்பர் எந்தக் கடவுளையும் குறிப்பிடவில்லை என்பார் முடியரசன். அதை அவர் வலியுறுத்துவதற்கு அரணாய் இன்னொரு நிகழ்வும் நடந்தது.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நான் மாணவத்தலைவராக இருந்தபோது குறள் விழாவிற்கு ஒருமுறை தந்தை பெரியாரைப் பேச அழைத்திருந்தோம். அவருக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம் என ஆசிரியர் முடியரசனாரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் ‘கடவுள்வாழ்த்தைக் கொடுக்கலாம். கடவுள் வாழ்த்து என்று நேரிடையாகச் சொல்லாமல் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் பேசுங்கள் ஐயா..’ என்று சொல்லுங்கள் என்றார். அதேபோல் ஐயாவிடம் தெரிவித்தேன்.
அவர் “உண்மையைச் சொல். நீயாகக் கேட்கிறாயா? யாரும் சொல்லித்தந்து கேட்கிறாயா?” என்று தாடியை நீவியபடி கேட்டார்.
“ஐயா, உண்மையைச் சொல்லட்டுமா? பொய் சொல்லட்டுமா?” என்று கேட்டேன்.
“இரண்டையுமே சொல்..” என்றார்.
“நானாகக் கேட்கிறேன் என்பது பொய்.
என் ஆசிரியர் முடியரசன் கேட்கவைத்தார் என்பதே உண்மை.” என்றேன். “என்னை மாட்டிவிடுவதற்காகவே அந்த ஆளு செய்வாருயா..” என்று அவர் சிரித்துக்கொண்டே மறுக்காமல் ஒப்புக்கொண்டார். துறைத்தலைவர் உள்ளிட்ட எல்லோரும் ‘ஐயா பேச்சு கலகத்தை உண்டாக்கிவிடுமோ? ஏன் இந்த தலைப்பைக் கொடுத்தாய்?’ என்று பயந்து என்னைத் திட்டினார்கள்.
“அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது. நான் பொறுப்பு” என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.
ஐயாவும் விழா மேடையில் முதல் அதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறட்பாவையும் பகுத்தறிவு நோக்கில் விளக்கி அருமையாகப் பேசினார். பத்தாவது குறட்பாவில் ‘இறைவனடி சேராதார்’ என்னும் பாடலடிக்கு என்ன விளக்கம் சொல்வாரோ? என்று எல்லோரும் எதிர்பார்த்தோம். இறைமை என்பதற்குத் தலைமை என்பதும் ஒரு பொருளாகும். வள்ளுவனார் இறைவனென்று சுட்டுவது தலைமைத் தகுதியுடைய தலைவனையே என்று விளக்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பேருரையைப் பதிவு செய்யக் கருவிகளோ வசதிகளோ அன்றில்லை. எங்கள் உள்ளங்களில்தான் பசுமையாய்ப் பதியவைத்துக்கொண்டோம். கடவுளைப் பழித்துரைக்காமல் முதலதிகாரப் பாடல்களில் வள்ளுவனார் தலைவரையே சுட்டுகிறார் என்று நிறுவிய ஐயாவின் அற்புதமான ஆய்வுரை அனைவரையும் ஈர்த்தது. அது முடியரசனாரால்தான் வாய்த்தது. விழா முடிந்ததும் முடியரசனார் “இப்போது தெரிகிறதா? ஏன் அவருக்கு இந்த தலைப்பைக் கொடுக்கச் சொன்னேனென்று.. வகுப்பறையில் கம்பராமாயண வாழ்த்துப்பாடலில் ‘தலைவர்’ என்று கம்பர் சுட்டியிருப்பதை நான் வகுப்பில் நடத்தியது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். நாங்கள் அகமிக மகிழ்ந்தோம்.
இன்னொருமுறை கம்பன் விழாக் கவியரங்கில் ‘இராமன் திருமார்பழகு’ என்னும் தலைப்பில் கவிதைபாட ஒரு கவிஞர் மறுத்து ‘வெள்ளைக்கவி பாட எனக்கு விருப்பமில்லை’ என்று கடிதமெழுதியிருந்தார்.
“குறைவான கால இடைவெளியில் வேறு யாரிடம் கேட்கலாம்?” என்று கம்பனடிப்பொடி கேட்டார். “முடியரசனாரிடம் கேட்கலாம்.” என்றேன் நான்.
“அவர் ஒப்புக்கொள்வாரா?” என்று ஐயத்துடன் கேட்டார்.
“நான் ஒப்புக்கொள்ள வைக்கிறேன்..” என்றேன்.
” நான் கடிதம் அனுப்புகிறேன்.அவருக்கு என் கடிதம் கிடைத்தபிறகு நேரில் சென்று பேசு..” என்று சொன்னார்.
நான் செல்வதற்குள் கம்பனடிப்பொடியாரின் கடிதத்திற்கு ‘இசைந்தேன்’ என்று பதிலனுப்பிவிட்டார்.
கவியரங்கத்தில் அன்று அவர் பாடியதைப்போல் வைணவ அடியார்கள் எவரும் பாடியதில்லை. அவ்வளவு அருமையாகப் பாடி எல்லோரையும் நெகிழ வைத்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரை கவியரங்கத்தலைமையேற்க வைத்தார் கம்பனடிப்பொடியார்.
தமிழே தம் உயிர்மூச்சென இறுதிவரை கொள்கையுறுதியோடு தமிழுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த வீறுகவியரசர் முடியரசனாரின் இறுதிநாட்களில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என் உள்ளங்கையை அவர் உள்ளங்கையால் அழுத்தி அணைத்தவாறே “நீ கற்றதை வாழ்வு முழுதும் கடைப்பிடிப்பாயாக!” என்றார்.
(இதைப்பேசும்போதே குரல் தடுமாறி கண் கலங்கிப் பேச இயலாமல் கம்பனடிசூடி நாதழுதழுத்தார். பின் மனதைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்தார்.)
அவர் கேட்டதும் நானும் அவர் உள்ளங்கையை அழுத்தி என் உறுதியைத் தெரிவித்தேன்.
தம்பி தமிழ்முடியரசனை நான் சிறுவயது முதலே அறிவேன்.தேவகோட்டை டி பிரிட்டோ பள்ளியில் பணிக்குச் சேர்ந்தபிறகு நன்கு பழக்கமானார். இக்கருத்தரங்கில் என் ஆசிரியர் முடியரசனாரின் கம்ப சிந்தனைகளைப்பற்றி சிறப்பான கட்டுரையைத் தந்திருக்கிறார்.
நேற்று அன்புமகள் பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசியதுபோல இராமனையும் இராமாயணத்தையும் எதிர்த்தவர்கள்கூட கம்பனை எதிர்க்க மாட்டார்கள்; கம்பன் தமிழை மறுக்கமாட்டார்கள். அப்படித்தான் முடியரசனாரும் கம்பன் தமிழை ஆழ்ந்து தோய்ந்து நேசித்தார்.. மாற்றுக்கருத்துடையோரும் கம்பனை விரும்புவார்கள்.அதனால்தான் உலகெங்கிலும் ‘இராமன் கழகம்’ என்று பெயர் சூட்டாமல் ‘கம்பன் கழகம்’ என்று நாம் பெயர் சூட்டியிருக்கிறோம்.
28-03-2021 முற்பகல் காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்ற கம்பராமாயண உலகத்தமிழ் ஐந்தாம் ஆய்வரங்கில் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் அவர்களின் அமர்வுத் தலைமையில் ‘வீறுகவியரசரின் கவிதைகளில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பரிமாணங்கள்’ என்னும் தலைப்பிலான கட்டுரையை பன்னாட்டுக்கருத்தரங்க ஆய்வுக்கோவை பதிப்பாசிரியர்களுள் ஒருவரான முனைவர்.தமிழ்முடியரசன் வாசித்தளித்தபோது அமர்வுத்தலைவரின் பின்னூட்டமே மேலே உள்ளது.
மதுரை வானொலியில் ஒலிபரப்பாகிய இந்நிகழ்வில் கம்பனடிசூடி அவர்கள் அரிய வரலாற்றுத் தகவல்களை நினைவுகூர்ந்தார். அவர் உரையின் சுருக்கமே மேற்பகுதியாகும்..
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி (Tamil America TV) யின் வலையொளிப்பதிவில் (02:04:41-02:14:13) 👇